“ஆர்யாவுக்குக் கல்யாணம் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்!” – என்ன நடக்கிறது `எங்க வீட்டு மாப்பிள்ளை’யில்?

`ஆர்யாவுக்குக் கல்யாணம்’ என்ற ஆரவாரத்துடன் புதிதாகத் தொடங்கப்பட்ட `கலர்ஸ் தமிழ்’ சேனலில் ஒளிபரப்பாகத் தொடங்கியது, `எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி. தன்னை மணமுடிக்க விரும்பியவர்களில் 16 பேரைத் தேர்ந்தெடுத்து, அவர்களுடன் பழகிக் களித்தார், நடிகர் ஆர்யா. அந்தப் பழகுதலுக்குப் பிறகு, பதினோறு பேர் எலிமினேட் ஆக, மீதி ஐந்து பேரின் வீடுகளுக்கு விசிட் போனார். இந்த `ஹோம் விசிட்’ முடிந்ததும் இருவர் எலிமினேட் ஆக, கடைசியில் அகதா, சீதாலக்ஷ்மி, சுசானா ஆகிய மூன்று பேர் இறுதிச் சுற்றுக்கு வந்திருக்கிறார்கள்.

எங்க வீட்டு மாப்பிள்ளை

`இந்த மூன்று பேரில் ஆர்யா கரம் பிடிக்கப் போவது யார்… என்பது இந்த நிமிடம் வரை எங்களுக்கே தெரியாது!’ என்கிறார், இந்நிகழ்ச்சியின் இயக்குநர், பிரகாஷ். `எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி தொடங்கியது முதல் க்ளைமாக்ஸ் நெருங்கிவிட்ட இப்போதைய சூழல் வரை நடந்த விஷயங்கள், கும்பகோணம் மற்றும் இலங்கையில் சந்தித்த எதிர்ப்புகள் குறித்தெல்லாம் மனம் திறந்து பேசுகிறார்.

“முதல் முப்பது எபிசோடுகள் வரை ஜெய்ப்பூர்ல ஷூட்டிங் பண்ணோம். சம்பந்தப்பட்ட பொண்ணுங்களுக்கும் ஆர்யாவுக்குமான சின்னச் சின்ன ஊடல்களால, ஷூட்டிங் ரொம்ப ஜாலியாவே போச்சு. ஷோவுல `எலிமினேஷன்’ இருக்கும்ங்கிறது முன்னாடியே தீர்மானிக்கப்பட்டதுதான். அதனால, சிலர் எலிமினேட் ஆனப்போ வெளிப்படுத்தின எமோஷனைப் படம் பிடிச்சுக் காட்டினோம். ஜெய்ப்பூர் ஷூட்டிங் முடிச்சுட்டு சென்னைத் திரும்பின பிறகே, எங்களுக்கு இங்க ஷோ குறித்து எதிர்மறையாகக் கிளம்பிய பேச்சுகள் குறித்து தெரிய வந்தது.

ஆர்யா

இந்த நிகழ்ச்சி தமிழ்க் கலாசாரத்துக்கு எதிரானதுனு பேசினவங்களுக்கு ஒண்ணு மட்டும் சொல்ல விரும்புறேன்… 21- ம் நூற்றாண்டுல இருக்கோம். இப்பக்கூட எத்தனை வீடுகள்ல கணவரைத் தேர்ந்தெடுக்கிறதுல பொண்ணுங்களோட விருப்பத்துக்கு மதிப்பு கொடுக்கிறோம்? இந்த நிகழ்சசி அந்த விருப்பத்துக்கான மேடை. பெண்களுக்கான உரிமையை உரக்கச் சொல்ல ஒரு மிகப்பெரிய முன்னெடுப்புனு இந்த ஷோவை நாங்க சொல்வோம். பொதுப்புத்தியில இதை எதிர்க்கிறவங்களை என்ன சொல்றது? கும்பகோணத்துல மாதர் சங்கம்னு சொல்லி சிலர் எதிர்ப்பு தெரிவிச்சாங்க. திருச்சியில ஒரு டிராஃபிக் போலீஸ் காலால் உதைச்சு கர்ப்பிணிப் பொண்ணு இறந்தாங்களே, அதுக்காக மாதர் சங்கங்கள் குரல் கொடுத்தாங்களா… பெண்களுக்கான உண்மையான விடுதலை எது, அவங்களை அடிமைப்படுத்தி வைப்பது எதுங்கிற தெளிவே பெண்கள் அமைப்புகளுக்கு இல்லைனு நினைக்கிறப்போ வருத்தமா இருக்கு.” என்றவரிடம், இலங்கையில் ஷூட்டிங் செய்த அனுபவம் குறித்துக் கேட்டோம்.

ஆர்யா

ஃபைனல் ரவுண்ட் வந்த மூணு பேர்ல சுசானாவுக்குப் பூர்வீகம் யாழ்ப்பாணம். இலங்கையில் எண்பதுகள்ல போர் உக்கிரமா நடந்தப்போ அவங்க குடும்பம் கனடாவுக்குக் கிளம்பியிருக்கு. அவங்களோட சொந்த பந்தங்கள் இன்னைக்கும் யாழ்ப்பாணத்துல இருக்காங்க. அவங்களைச் சந்திச்சுப் பேசலாம்னு அங்கே போனோம். அங்கெல்லாம் ஷூட்டிங் நடத்த அனுமதி வாங்குறதே பெரிய சிரமமா இருந்தது. தமிழ்நாட்டுல இருந்து வந்திருக்கோம்ங்கிறதால, ஏகப்பட்ட கெடுபிடி. குறிப்பா, தமிழீழம், முள்ளிவாய்க்கால், பிரபாகரன், எல்.டி.டி.ஈ போன்ற வார்த்தைகளையே உச்சரிக்கக் கூடாதுனு ஸ்ட்ரிக்ட்டா சொல்லியே அனுமதி தந்தாங்க. அப்பக்கூட மஃப்டியில எங்க ஷூட்டிங் யூனிட்டுக்குள்ளேயே சிங்கள ராணுவ ஆட்கள் இருந்தாங்க. அதையும் மீறி பதிவு பண்ணக் கிடைச்ச ஒரு சந்தர்ப்பத்தை நழுவ விடாம, நாங்க சில விஷயங்களைப் பதிவு பண்ணிணோம். நிகழ்ச்சியோட ஷூட்டிங் நடந்த இடம், இலங்கை ராணுவத்துக்கும், `விடுதலைப்புலிகள்’ தலைவர் பிரபாகரனுக்கும் இடையே அமைதிப் பேச்சு வார்த்தை நடந்த இடம். யாழ்ப்பாணம் நூலகத்துல ஷூட்டிங் பண்ணக் கூடாதுனு சிலர் எதிர்த்தாங்க. மொத்தத்துல இலங்கையில நாங்க சந்திச்ச தமிழ் மக்கள் கேமராவுக்குப் பின்னாடி பல விஷயங்களைப் பேசினாங்க. சிலவற்றை நாங்க ஷூட் செய்திருக்கோம். ஆனா, ஒளிபரப்பினா அந்த மக்களுக்குச் சிக்கல் வரலாம்கிறதால, ஒளிபரப்பலை!”என்கிறார்.

இயக்குநர் பிரகாஷ்

“சிலர், `ஆர்யா செலக்ட் பண்ற ஒருவர் ஓ.கே. ஆனா, மத்த பதினைஞ்சு பேருக்கு இனி எப்படித் திருமணம் நடக்கும்?’ என்கிறார்களே…” 

கற்காலச் சிந்தனை இது. ஒரு ஆணோட கை குலுக்கி, ஹக் பண்ணி, சிரிச்சுப் பேசிப் பழகினாலே கற்பு போயிடுமா? ஷோவுல ஆர்யாவும் தன்னோட கடந்த காலம் குறித்துப் பேசினார். பொண்ணுங்களும் பேசினாங்க. அதனால, இந்தமாதிரி பேச்சுகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை. இந்த இடத்துல இன்னொரு விஷயத்தையும் சொல்ல விரும்புறேன். பதினைஞ்சு பேரை ஆர்யா ரிஜெக்ட் பண்ணி ஒருத்தரைத் தேர்ந்தெடுக்கிறார் இல்லையா… அந்த ஒருத்தரோட விருப்பத்துக்கும், கடைசியில மதிப்பு அளிக்கிறோம். ஒருவேளை அவங்க ஆர்யாவை `வேண்டாம்’னு சொல்லிட்டாங்கன்னா, கல்யாணம் நடக்காது!” என்கிறார், பிரகாஷ்.

ஆர்யாவுக்குக் கல்யாணம் நடக்குமா, நடக்காதா? என்ற விஷயத்தில் நிகழ்ச்சியின் இயக்குநராலேயே இன்னும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.