மாய வலைக்குள் சிக்க வைக்கும் மாயாவி! உலகை அழிக்கும் பிரளயமாக மாறுமா?

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் எல்லாமே ஆசைகளாக உருவெடுப்பதில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளுமே எம் மனதில் ஆசையை தூண்ட காரணமாக அமைகின்றன.

மனிதனுக்கு ஆசை வந்தால் சாதனை படைப்பான். அதேவேளை ஆசை பேராசையாக மாறும் தருணம் அவனது இறுதி கணமாகிறது.

இந்த பேராசை ஒருவனை வீழ்த்தினால், இன்னொருவனை உயர்த்துகிறது. ஆனால் உயர்ந்தவன் மனிதம் அற்ற மனிதன் எனும் போர்வை போர்த்திய விலங்காய் திரிகிறான் பூமியில்.

இந்த வார்த்தைகள் வெறும் கற்பனை அல்ல. உணர்வு ரீதியாக ஒவ்வொரு மனிதனையும், அவனுள் தூங்கும் மனிதத்தையும் தட்டியெழுப்பும் கதாயுதமாக வேண்டும்.

ஆம் எல்லாத்துறைக்கும் பொருந்துகின்ற இந்த வார்த்தைகள் மூலம் நான் இப்பொழுது எமது வாழ்வை விழுங்கும் உண்மையற்ற விளம்பரங்களின் முகங்களை தோலுரித்து காட்டவே முயல்கின்றேன்.

பண்டங்களையும், சேவைகளையும் பெற்றுக் கொள்ளும் நுகர்வோரின் தேவைகளையும், விருப்பங்களையும் அறிந்து, நுகர்வோரின் திருப்தியை இலக்காக கொண்டு செயற்படும் வணிகங்கள் தமது உற்பத்தியினை விற்பனை செய்ய பல்வேறு நுட்பங்களை கையாள்கின்றன.

நுட்பம் என்றொரு வார்த்தை என்று மனிதனின் வாழ்விற்குள் புகுந்ததோ அப்பொழுது ஆரம்பித்தது விஞ்ஞானத்தின் அதீத வளர்ச்சி. இந்த வளர்ச்சி நன்மையை ஒரு புறம் கொடுத்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக உயிரை பறிக்கும் உத்திகளையும் வகுத்து கொடுக்கின்றன.

இவ்வாறான நுட்பங்களில் விளம்பரப்படுத்தலும் மிக முக்கிய இடத்தினை வகிக்கின்றது. விளம்பரங்களினூடாக நுகர்வோருக்கு பொருள் பற்றிய தகவல்கள் வழங்கப்படுகின்றன.

எனினும், போட்டி போட்டு வெற்றி எனும் உச்சத்தை அடைவதற்கு விளம்பரங்களின் பங்களிப்பே அதிகம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. ஏனெனில் நாம் எங்கு பார்த்தாலும் தொலைக்காட்சி, கணனி, நவீன ரக கையடக்க தொலைபேசிகள் சிதறிக்கிடக்கின்றன.

இவை விளம்பரங்களின் வேலையை சுலபமாக செய்ய வழி வகுக்கின்றன. எனவே விடயங்களை மக்களுக்கு கொண்டு செல்லும் வழி இலகுவானதால் வெற்றி என்பது விளம்பரங்கள் மக்களை ஈர்க்கும் திறனிலேயே தங்கியுள்ளதாக எண்ணம் விதைக்கப்பட்டு விட்டது.

இந்த எண்ணத்தின் விளைவே உண்மைத்தன்மையற்ற, மெருகூட்டப்பட்ட விளம்பரங்களின் உருவாக்கம். ஒரு பொருளைப்பற்றிய தெளிவையும், உண்மைகளையும் எடுத்துரைக்க வேண்டிய விளம்பரங்கள் மக்களை தன் மாய வளைக்குள் சிக்க வைக்கும் மாயாவியாய் மாறி வருகிறது.

இவ்வாறான போலியான விளம்பரங்களால் நுகர்வோர் அதிலும் குறிப்பாக குழந்தைகள் கவரப்படுகின்றனர். இதனூடாக அப்பொருளில் உள்ள நன்மை, தீமை குறித்து சிந்திக்க முடியாமல் நமது மூளை கட்டிப் போடப்படுகிறது.

இதனடிப்படையில் நாம் பார்த்தால் நுகர்வோரின் நுகர்வு நடவடிக்கையானது இருவகையாக பிரிக்கப்படுகிறது. அதில் ஒன்று உணர்ச்சிவசப்பட்ட நுகர்வு, மற்றையது நிர்ப்பந்தப்படுத்தப்பட்ட நுகர்வு.

தற்காலத்தில் நச்சு இரசாயனங்களுக்கு பழக்கப்பட்ட மானிட உடலுக்கு உணர்ச்சிவசப்படல் என்பது பழக்கமாகிவிட்டது. அங்கு கோவமானலும் சரி, அதேநேரம் மகிழ்ச்சியானாலும் சரி. இந்த உணர்ச்சிவசப்படும் நிலையானது நம்மிடமுள்ள ஆசைகளை பேராசைகளாக மாற்றுகின்றன.

இந்த பேராசைக்கு தீனி போடும் விதமாக அமைகின்றன உணர்ச்சிகளில் அதிக தாக்கம் செலுத்தும் வகையில் அமையும் விளம்பரங்கள்.

இவ்வாறான விளம்பரங்கள் பொருளைப்பற்றி யோசிக்காமல் எம்மை நுகரத் தூண்டுகின்றன. இதில் யாரை குறை கூறுவது. வேகமாக அனைவரும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை பயணத்தில் ஒருவரை மிஞ்சி ஓடுவதற்கே மற்றையவர் முற்படுவார்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெற்றியை விரைவாக அதே நேரம் இலகுவாக தொட குறுக்குவழிகளை பயன்படுத்தும் சிலர் எப்பொழுதும் இருந்து கொண்டே இருப்பார்கள்.

இந்த நிலையில் நம்மை பாதுகாத்து கொள்ள, நாமே முயற்சிக்க வேண்டும். இந்த பிரச்சினையானது இலங்கை வரை மட்டும் நின்று விடாது உலகெங்கும் வியாபித்துள்ளது.

குறித்த பிரச்சினை உலகை அழிக்கும் பிரளயமாக மாறும் முன் அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டியது நம் கடமையாகும். எனவே விளம்பரங்களை பார்த்து பொருட்கள் வாங்காமல், பொருட்களிலுள்ள நன்மை மற்றும் தீமைகளை பார்த்து பொருள் வாங்க முயற்சிப்பது அவசியமாகும்.


You may like this video