உலக புகழ் பெற்ற, இலங்கையின் திரைப்பட இயக்குனர் கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேரில் சென்று சந்தித்துள்ளார்.
கொழும்பு – திம்பிரிகஸ்யாய பகுதியில் அமைந்துள்ள ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிற்கு நேற்று காலை பிரதமர் சென்றுள்ளார்.
பிரதமரின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் பிரதமருடன் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதன்போது நட்புறவு ரீதியாக கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் கடந்த வியாழக்கிழமை தனது 99ஆவது பிறந்ததினத்தை கொண்டாடியிருந்தார்.
இவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜேம்ஸ் பீரிஸின் வீட்டிற்கு சென்றிருந்தார்.
இதன்போது, பீரிஸின் நலன் விசாரித்த ஜனாதிபதி பீரிஸின் குடும்பத்தினருடன் இணைந்து கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
இலங்கை சினிமாத்துறைக்கு அவர் ஆற்றிய சேவைகளை கருத்திற்கொண்டு அவருடைய செலவுகளுக்காக மாதாந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.