சர்வதேச தரத்தை இழக்கும் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ்? அச்சத்தில் பயணிகள்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட A320neo மற்றும் A321neo விமானங்கள், அவசரமாக தரையிறங்க தகுதியான விமான நிலையங்களுக்கு வெளியே ஒரு மணித்தியாலங்களுக்கும் அதிக நேரம் பயணிக்கும் அனுமதி பத்திரத்தை இழந்துள்ளது.அதில், ஒரு விமானத்தில் எரிபொருள் கண்கானிப்பு கட்டமைப்பில் குப்பை இருந்ததனை அவதானிக்காமல் விமானத்தை பயன்படுத்த விமான சேவை நடவடிக்கை மேற்கொண்டமையே அதற்கு காரணமாகும்.

கடந்த ஜனவரி மாதம் 21ஆம் திகதி ஹொங்கொங் நோக்கி பயணிக்கவிருந்த UL 898 என்ற விமானத்தின் ஒரு என்ஜின் இயங்காமையினால் மீண்டும் விமானம் திரும்பி சென்றுள்ளது.இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை, குறித்த விமானத்தின் அனுமதி பத்திரத்தை இரத்து செய்தது.இந்த விடயம் தகவல் அறியும் சட்டமூலத்தின் கீழ் பெற்றுக் கொண்ட கடித சாட்சியில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஆங்கில இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.இந்த சம்பவம் மிகவும் கடுமையான ஒன்று என அதிகார சபை கூறுகின்ற நிலையில், இரத்து செய்யப்பட்ட அனுமதி பத்திரம் 5 விமானங்களை பாதிப்பதாக கூறப்படுகின்றது.

இரத்தினை நீக்கி கொள்ளுமாறு ஸ்ரீலங்கன் விமான சேவை கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு விசாரணையின் போது அனுமதி பத்திரம் வழங்குவதற்கான தகுதி இல்லை என்பது தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் இயக்குனர் நாயகம் நிமலசிறி தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமைக்கமைய ஸ்ரீலங்கன் பராமரிப்பு துறையின் திறன், தொழில் மற்றும் நம்பகத்தன்மை பிரச்சினைக்குரிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.இதன் காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகள் அச்ச நிலை கொண்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.