இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி 54 வயது முதியவரை கும்பல் ஒன்று கட்டி வைத்து கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் Donkeshwar கிராமத்தில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இப்பகுதியில் குடியிருந்து வருபவர் 54 வயதான சயனா என்பவர். மதுப்பழக்கத்திற்கு அடிமையான இவர் 3 முறை திருமணம் செய்து, பல்வேறு காரணங்களால் மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர், கடந்த சனிக்கிழமையன்று அதே பகுதியைச் சேர்ந்த ஏழு வயது சிறுமியைப் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சம்பவம் நடந்தபோது, அச்சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லை. சயனாவின் வீட்டில் இருந்து அழுதபடியே சிறுமி வெளியே வந்ததைக் கண்ட, அப்பகுதி மக்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது, சயனா தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக அச்சிறுமி கூறியுள்ளார். அதோடு, இந்த சம்பவத்தால் சிறுமியின் உடல்நலமும் பாதித்தது.
அதிக ரத்தப்போக்கால் அச்சிறுமி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சயனாவிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்தது தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து சயனாவினை மரத்தில் கட்டி வைத்து, கல் மற்றும் கம்பால் அவரை கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
இதனால் பலத்த காயமடைந்த அவர் மயக்கமடைந்தார். இதற்கிடையே, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார், அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் பொலிசார், இந்த சம்பவத்தை காட்டிலும் பல சட்ட அத்துமீறல்கள் அப்பகுதியில் நடந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.