மீண்டும் முதலமைச்சராகுவாரா சீ.வி.விக்னேஸ்வரன்?

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட விருப்பம் தெரிவித்தால் அவருடைய வேண்டுகோள் பரிசீளிக்கப்படும் என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

“அடுத்த மாகாணசபை தேர்தலில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்படமாட்டர்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  அவர் தொடர்ந்து கருத்து வெளியிடும் போது;

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் மாகாண சபை தேர்தல்கள் இடம்பெறவுள்ளன.இந்த சூழலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளுக்கு யாரை முதலமைச்சராக நிறுத்துவதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகப்பூர்வமான தீர்மானம் எதனையும் இதுவரை எடுக்கவில்லை.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் இதுவரை வடமாகாண முதலமைச்சர் தெரிவு தொடர்பில் எந்த கூட்டங்களையும் நடத்தவில்லை.இவ்வாறிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் வடமாகாண முதலமைச்சர் தொடர்பாக தெரிவித்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்தாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “வடமாகாண சபைக்கான அடுத்த தேர்தலின் போது, முதலமைச்சராக நிறுத்தப்படவுள்ளவர் குறித்து தற்போது தீர்மானிக்க முடியாது” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.