மின்மயானத்துக்கு தாயின் உடலை பைக்கில் கொண்டுசென்ற மகன்!

தாயின் சடலம்

சென்னையில், வறுமையின் காரணமாக தாயின் உடலை பைக்கில் வைத்து மின்மயானத்துக்கு எடுத்துச்சென்ற சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை விருகம்பாக்கம், வேம்புலிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர், கண்ணன். இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு அருண்குமார், அஜித்குமார் என இரண்டு மகன்கள் உள்ளனர். கண்ணனின் சொந்த ஊர் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம். இரண்டு மகன்களும் சென்னையில் வேலைபார்த்ததால் உத்தமபாளையத்திலிருந்து சில ஆண்டுக்கு முன் இங்கு வந்தார். கூட்டுக் குடும்பமாக அவர்கள் வசித்துவந்தனர். கண்ணனின் அம்மா புவனேஸ்வரியும் இவர்களுடன் இருந்தார். அவருக்கு வயது 85.

அருண்குமார், கால்டாக்ஸி டிரைவராகப் பணியாற்றினார். அஜித்குமார், சூப்பர் மார்க்கெட்டியில் வேலைபார்த்தார். இவர்களின் வருமானத்தில்தான் குடும்பம் நடந்தது.

இந்த நிலையில் அருண்குமார், ஒரு பெண்ணைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு, அவர் வீட்டுக்கு வருவதில்லை என்று சொல்லப்படுகிறது. இதனால், அஜித்குமாரின் வருமானத்தில் குடும்பத்தை நடத்த அவர்கள் சிரமப்பட்டனர். வறுமையின் காரணமாக,  கடந்த இரண்டு மாதங்களாக வீட்டுக்கு வாடகை கொடுக்கவில்லை. இந்தச் சமயத்தில், புவனேஸ்வரிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் இறந்துவிட்டார். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்குக்கூட பணமில்லை. இதனால் யாருக்கும் தெரிவிக்காமல், அதிகாலை 4 மணியளவில் புவனேஸ்வரியின் உடலை பைக்கில் வைத்து விருகம்பாக்கம், மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின்மயானத்துக்குக் கொண்டுசென்றனர். பைக்கிலிருந்து புவனேஸ்வரியின் உடல் கீழே விழுந்துவிடாமலிருக்க, கண்ணன், சாந்தி ஆகியோர் பிடித்துக்கொண்டனர்.பைக்கை அருண்குமார் தள்ளிக்கொண்டு சென்றார்.

இதை, அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் பார்த்து வேதனைப்பட்டனர். .உடனடியாக விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தார். அப்போதுதான், வறுமையின் காரணமாக அவர்கள் பைக்கில் உடலை மின்மயானத்துக்குக் கொண்டுசென்றது தெரியவந்தது. மின்மயானம் உ ள்ள பகுதி, கே.கே.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்டது என்பதால், அங்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கே.கே.நகர் போலீஸார், புவனேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தொடர்ந்து, போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

இந்தச் சம்பவம், சென்னையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.