ஹக்கீமின் மூவருக்கு பிள்ளையானின் 75 இலட்சம்! திடுக்கிடும் ஆதாரங்கள்!

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது, அரசியல் கட்சிகள் அனைத்திலும் ஒவ்வொரு பிரதேசத்திற்கு ஏற்றாற்போல சிற்சில அதிர்வலைகளை தோற்றுவித்தது என்பது யாவரும் அறிந்ததே, எனினும் பல கட்சிகளின் உள்குத்துக்களையும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் முடிவுகள் புடம்போட்டுக்காட்டத் தவறவில்லை.

இதன்போது பிரதான கட்சிகள் சிலவற்றிற்கு பலத்த ஏமாற்றமும், மேலும் சில இதர கட்சிகளுக்கு எதிர்பாராத வெற்றியையும், அரசியல் இலாபங்களையும் இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அள்ளித்தந்திருந்தது.

இந்நிலையில், கடைபிடிக்கப்பட்ட முறையற்ற தேர்தல் ஒழுங்குமுறைகளின் காரணமாக பல அரசியல் கட்சிகள் கணிசமான ஆசனத்தை பெற்றுக்கொள்ள முடியாமலும், ஆசனங்கள் கிடைக்கப்பெற்ற போதும் ஆட்சி அமைக்க முடியாது துர்ப்பாக்கிய நிலைக்கும் உள்ளாகியிருந்தனர்.

இந்த சந்தர்ப்பத்தில் ஒரு கட்சி ஆட்சி அமைக்க வேண்டுமெனில் பிரிதொரு கட்சியின் ஆதரவினை நாட வேண்டிய ஒரு நிலையும் ஏற்பட்டது.

ஆனால் இந்த சூழலை சில கட்சிகள் தமக்கு ஆதரவாக பயன்படுத்திக்கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது, பல பேரம் பேசும் முயற்சிகள், அரசியல் வியாபாரங்கள் நடந்துள்ளமை தற்போது வெளிவரத்தொடங்கியுள்ளன.

இந்நிலையில், மட்டக்களப்பு வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேசசபையின் ஆட்சியினை பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பெற்றுக்கொண்டுள்ளமை குறித்து பல இரகசியங்கள் அம்பலமாகியுள்ளன.

அதாவது, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையிலான புரிந்துணர்வு பேச்சுவார்த்தையின் பின்னரே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரித்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

பிள்ளையானின் சகோதரர் ஒருவருக்கும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமுக்கும் இடையில் இந்த புரிந்துணர்வு பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இதேவேளை, மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் உதவித் தவிசாளரை தெரிவு செய்யும் அமர்வுக்கு முன்னர் ரவூப் ஹக்கீம் பேத்தாழையில் தங்கியிருந்ததாகவும், அங்கிருந்தே இந்த அரசியல் காய்நகர்த்தல்களை மேற்கொண்டதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

இதில் முதல் இரு வருடங்களுக்கு மட்டுமே தமிழர் ஒருவர் தவிசாளராக இருக்க முடியும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்வைத்த நிபந்தனைக்கு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த மூவருக்கு தலா 25 இலட்சம் வீதம் 75 இலட்சம் ரூபா முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானால் வழங்கப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் கசிந்துள்ளன.

இதன் காரணமாகவே தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவளித்துள்ளது என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேசசபையின் தமிழ் செயலாளரை இடம்மாற்றி அந்த இடத்திற்கு முஸ்லிம் செயலாளரை நியமிப்பது என்றும் நிபந்தனை போடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலத்தில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி வாழைச்சேனை, கோறளைப்பற்று பிரதேசசபையை ஆட்சி செய்த போது பிள்ளையானால் ஒரு முஸ்லிம் செயலாளர் நியமிக்கப்படடதாகவும், தற்போது மீண்டும் முஸ்லிம் செயலாளரை நியமிக்க கட்சி சம்மதம் வழங்கியுள்ளதும் இதை உறுதிப்படுத்துகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சிஇணைந்து ஆட்சி அமைத்தால் அதற்கு எதிராக செயற்படுவதாக கூறிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, தற்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி செய்வது வேடிக்கை என்று நகைக்கத் தோன்றுவதுடன் இதில் இருக்கும் முறைமுக வியாபாரம் என்ன என்று ஒரு கணம் கேள்வி எழவும் தோன்றுகின்றது.

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படுகின்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன், அக்காலக்கட்டத்தில் எவ்வாறு சட்டவிரோதமான முறையில் பணம் சம்பாதித்தார் என்றும் எவ்வாறான இராஜதந்திர திட்டங்களுடன் பல சொத்துக்களை அபகரித்தார் என்பதும் மக்கள் யாவரும் இன்றும் மறவாத ஒன்று.

இன்று அவை பல மதுபான விற்பனை நிலையங்களாக பிணாமிகளின் பெயரிலும் பிள்ளையானின் உறவினர்களின் பெயரிலும் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தற்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் ஆட்சி அமைக்கப்பட்டுள்ள வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபையின் ஆயுட்காலம் நிறைவுறும்போது அந்த சபையினை முழுவதும் துவம்சம் செய்யவதே குறித்த கட்சியின் நோக்கம் என்றும் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

தனக்கென நிலையான கொள்கைகளோ கோட்பாடுகளோ இல்லாத தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, இதற்கு முன்னர் கிழக்கு மாகாண மக்களின் வெறுப்பினை சம்பாதித்திருந்த நிலையில் தற்போது பிரதேச சபையில் ஆட்சி அமைத்திருப்பதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கணம் நியாயம் கிடைக்கும்? எவ்வாறு நியாயம் கிடைக்கும் என்பது சந்தேகமே.

மக்கள் சேவை தற்போது பேரம் பேசும் வியாபாரமாகியமையால் அவரவர்க்கு தன்னால் ஈட்டக்கூடிய இலாபம் என்ன என்பதையே நோக்கமாக கொண்டு ஆட்சி அமைத்துள்ளனர் என்பதும் இத்தருணத்தில் சுட்டிக்காட்டத்தக்கது.

தீவுசேனை பகுதியில் அயைப்பெற்றிருந்த தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் இரகசிய முகாமில் நடந்த சித்திரவதைகள், படுகொலைகள் என்பவற்றை மறந்துவிட்டதா இந்த சமூகம்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூடன் வெளிப்படையாக பேணும் உறவு ஆரோக்கியமானதே எனினும் திருட்டுத்தனமாக பேணும் உறவு ஆபத்தையே தரும் என்பதில் மறுப்பிற்கிடமில்லை.

தற்போது கல்குடா தொகுதி விரைவில் அழிக்கப்பட்டு அங்கு உரிமை கொண்டாடும் நயவஞ்சக செயலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இறங்கியிருப்பது மனக்கசப்பினையும், வேதனையையும் ஏற்படுத்துகின்றது.

காத்திருப்பு என்பது நல்ல ஒரு தலைமைத்துவத்தினதும் தலைவர்களினதும் ஆரம்பம் என சான்றோர் தெரிவித்துள்ளனர், அவ்வாறான மாவீரர்களும், மண் பற்றாளர்களும் வாழ்ந்த மட்டக்களப்பு மண்ணில் இழைக்கப்படும் துரோகம் தொடர்பில் வெட்கித் தலைகுணிவதாக பல அரசியல் ஆய்வாளர்கள் சமகாலத்தில் சுட்டிக்காட்டி வருகின்றனர்.