22 வயது இளம்பெண் ஒருவரை ஐந்தாறு பேர் கொண்ட குடிகாரக் கும்பல் ஒன்று முரட்டுத்தனமாக தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. பெண் என்றும் பாராமல், கண்ட இடத்தில் அப்பெண்ணை மிதிப்பது, கன்னத்தில் அறைவது உள்ளிட்ட நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ளது கோலபாரா மாவட்டம். இங்கு 22 வயது இளம்பெண் ஒருவரை ஐந்தாறு பேர் கொண்ட குடிகாரக் கும்பல் ஒன்று கடுமையாக தாக்கியுள்ளது.
பெண்ணின் முதுகு, கை, கால் என அக்கும்பல் கண்ட இடத்தில் மிதிக்கிறது. இதனால் அப்பெண் உதவி தேடி யாருக்கோ தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்.
வலியிலும், அவமானத்திலும் அலறித் துடிக்கும் அப்பெண்ணை விடாமல் தாக்கும் அக்கும்பல், பெண்ணின் முடியையும் பிடித்து இழுக்கிறது.
தொடர்ச்சியாக கன்னத்திலும் கடுமையாக தாக்குகிறது. இதில் நிலைகுனிந்த அப்பெண் தரையில் சரிகிறார். அப்பெண்ணுடன் வந்த ஆண் நண்பருக்கும் அடி விழுகிறது. அவர் கண்முன்தான் இந்த மொத்த சம்பவமும் நடைபெறுகிறது.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, “ பெண்ணை கடுமையாக தாக்கியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் 12 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அவர் ஆண் நண்பர் ஒருவருடன் மருத்துவ மையம் ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.
அந்த நேரத்தில் அவரை வழிமறித்த குடிகாரக் கும்பல் ஒன்று வேறு ஒரு ஆண் நண்பருடன் வெளியே செல்வது தொடர்பாக கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
இதனையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தில் அந்தக் கும்பல் அப்பெண்ணை கடுமையாக தாக்கியிருக்கிறது. பெண்ணுடன் சென்ற நபர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்.
அந்தப் பெண்ணோ மற்றொரு சமூகத்தைச் சேர்ந்தவர். இதனையத்து இனவாத பதட்டங்களை தவிர்க்கும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.