எதிர்வரும் சில தினங்களுக்கு பிற்பகலில் மழை பொழிவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா, வட மாகாணங்கள் மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் காலை வேளையிலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் காணப்படும்.
குறிப்பாக சப்ரகமுவா, மேல், மத்திய, வட மேல், ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் 100 மில்லி மீற்றர் (10 cm) அளவிலான பாரிய மழையை எதிர்பார்க்கலாம் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
சப்ரகமுவா மற்றும் மத்திய மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில், பனிமூட்ட நிலை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளையில், குறித்த பிரதேசத்தில் காற்றின் வேகம் வெகுவாக அதிகரிக்கலாம் எனவும், இடி மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்புப் பெறுமாறும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
சூரியனின் வடக்கு நோக்கிய நேர்கோட்டு பயணம் காரணமாக, எதிர்வரும் ஏப்ரல் 05 – 15 ஆம் திகதி வரை, சூரியன் இலங்கைக்கு நேரே நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும், நாளைய தினம் (11) பிற்பகல் 12.11 மணிக்கு நொச்சியாகம, கலன்பிந்துனுவெவ மற்றும் சோமபுர ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (11) பிற்பகல் 12.00 மணியிலிருந்து நாளை மறுதினம் (12) முற்பகல் 8.00 மணி வரையான, மாவட்டங்களின் மழை வீழ்ச்சி முன்னறிவிப்புப் பட்டியலை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய மழையின் அளவு (மி.மீ), மழை பெய்வதற்கான சாத்தியம் என்பன கீழ் வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளன.