சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றிரவு பத்தரமுல்லையில் உள்ள அமைச்சர் எஸ்.பி.திசநாயக்கவின் வீட்டில் இரகசியக் கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று மீண்டும் நடைபெறவுள்ள நிலையில், நேற்றிரவு நீண்ட நேரமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளித்த, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட 16 நாடாளுமன்ற உறுப்பினர்களே இந்தச் சந்திப்பில் பங்கேற்றனர்.
இவர்கள், கூட்டு அரசாங்கத்தில் இருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி விலக வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
கடந்த திங்கட்கிழமை நடந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இவர்கள் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தியிருந்தனர். அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
இதனால், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன ஒன்றுபட்ட முடிவை எடுக்கும் நோக்கில் இன்று மத்திய குழுக் கூட்டத்தை மீண்டும் கூட்டி முடிவெடுப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, அரசில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் நேற்றிரவு நீண்ட நேரம் இரகசிய ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான எந்த தகவலும் வெளியாகவில்லை.