பருத்தித்துறை பிரபல வர்த்தகருக்கு நீதிமன்றம் விதித்த உத்தரவு!

பொலிஸாரின் சட்டையை பிடித்து இழுத்து கடமைக்கு இடையூறு விளைவித்த பிரபல வர்த்தகரினை எதிர்வரும் 18.04.2018 வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் திருமதி நளினி சுபாகரன் உத்தரவிட்டார்.

பருத்தித்துறை நகர்ப் பகுதியில் நகர சபையினால் அமைக்கப்பட்ட கம்பி குழாயினால் ஆன வேலியை அப்பகுதியில் வர்த்தக நிலையத்தை நடத்தி வரும் வர்த்தகர் ஒருவர் வெட்டுவதாக பருத்தித்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின்படி அங்கு சென்ற போது மேற்படி வர்த்தகர் பொலிஸாரின் சட்டையை பிடித்து இழுத்து கடமைக்கு இடையூறு விளைவித்திருந்தார்.

இதனையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை அவரை கைது செய்த பொலிஸார் நேற்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்திய போது பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிஜட்டது.

மேற்படி பிரபல வர்த்தகர் சில மாதங்களிற்கு முன்னர் வங்கி முகாமையாளர் ஒருவரின் கழுத்துப் பட்டியை பிடித்து இழுத்து அவரை தாக்க முற்பட்டதாக நீதவானின் கவனத்திற்கு பொலிஸார் கொண்டு வந்தனர்.

இதனையடுத்தே அவரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் உத்தரவிட்டார்.