இலங்கையின் சில பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
புத்தளம், பாலவி பகுதியில் சிறிய டொனாடோ வகையான சூறாவளி தாக்கியுள்ளது.
இதன் காரணமாக அந்தப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பாரிய தொழிற்சாலை ஒன்று முழுமையாக அழித்துள்ளதாக புத்தளம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் 2 மணியளவில் இந்த சிறிய டொனாடோ ஏற்பட்டுள்ளதாக நிலையத்தின் உதவி இயக்குனர் கர்ணல் சஷ்மின்த ரொத்ரிகோ தெரிவித்துள்ளார்.
உணவு பெற்றுக் கொள்ள சென்ற சந்தர்ப்பத்தில் பாரிய சத்தத்துடன் காற்று வீசிய நிலையில் கட்டடம் உடைந்து விழுந்துள்ளதாக அங்கு பணியாற்றிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
காற்றில் பறந்த கூரைத் தகடுகள் பல மீற்றர் தூரம் பறந்து சென்று வீதிக்கு அருகில் விழுந்து கிடந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.
சம்பவத்தின் பின்னர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் முகாமையாளர் உட்பட அதிகாரிகள் அவ்விடத்திற்கு சென்று சேதங்களை ஆராய்ந்து வருகின்றனர்.