விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? -புருஜோத்தமன் (கட்டுரை)

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இருவார கால ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டு, இந்தியா சென்றிருக்கின்றார்.

வடக்கு மாகாண சபையின் முதலாவது பதவிக்காலம் முடிவதற்கு இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கின்ற நிலையில், அவர் இருவார கால விடுப்பில் சென்றிருப்பதானது, முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது.

முதலமைச்சரின் பயணத்துக்கு, ஆன்மீக அடையாளம் வழங்கப்பட்டாலும், அது அரசியல் நோக்கங்களும் கொண்டதாகவே இருக்க முடியும். அவர், டெல்லி வரை சென்று வருவார் என்று தெரிகிறது.

ஐந்து ஆண்டுகளுக்கு முன், வடக்கு மாகாண சபைத் தேர்தலைத் தமிழ் மக்கள் எதிர்கொண்ட விதம் அசாத்தியமானது. ஆக்கிரமிப்பாலும் அடக்குமுறையாலும் தமது போராட்ட உணர்வை, யாராலும் தோற்கடித்துவிட முடியாது என்கிற செய்தியை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய ஆணை மூலம், தமிழ் மக்கள் மீளவும் நிரூபித்தார்கள்.

கொழும்பிலிருந்து வந்தாலும், விக்னேஸ்வரனைத் தங்களது ஆணையின் நாயகனாகவே மக்கள் பார்த்தார்கள். ஆனால், பெரும் ஆணைபெற்ற கூட்டமைப்பும் ஆணையின் நாயகனாக அடையாளம் பெற்ற விக்னேஸ்வரனும் மக்களது நம்பிக்கையைப் பூர்த்தி செய்திருக்கின்றார்களா என்றால், பெரும் எரிச்சலே மிஞ்சுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகாரத்துக்கும் வெற்றிவாதத்துக்கும் எதிராக, முதலில் தடுப்புச் சுவர் எழுப்பியது தமிழ் மக்களே. 2012ஆம் ஆண்டு, கிழக்கு மாகாண சபைத் தேர்தலில், மஹிந்தவின் வெற்றிவாதத்துக்கு அச்சுறுத்தல் வழங்கிய தமிழ் மக்கள், 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தடுப்புச் சுவரை எட்டிப்பார்க்க முடியாதளவுக்கு கட்டி முடித்தனர்.

ஆனால், இன்றைக்கு அந்தத் தடுப்புச் சுவரின் கற்களை ஒவ்வொன்றாக உருவி, எதிரிகளின் சிறு அழுத்தத்துக்கே உடைந்துபோகும் ஒன்றாக மாற்றியிருப்பதில் கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் பொறுப்புக்கூற வேண்டியவர்களாகிறார்கள்.

ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கும் மீளெழுச்சி பற்றிய பெரும் நம்பிக்கையை விதைத்திருக்க வேண்டிய கூட்டமைப்பும் முதலமைச்சரும் பங்காளிச் சண்டைகளுக்குள் எல்லாவற்றையும் கானலாக்கி விட்டார்கள்.

“அதிகாரங்களற்ற மாகாண சபையை வைத்துக் கொண்டு, எதுவுமே செய்ய முடியாது” என்கிற வாதம், அடிப்படையில் சரியானதுதான். ஆனால், மாகாண சபைக்குண்டான மிகச்சிறிய அதிகாரங்களைக் கொண்டு மாகாண சபை நிர்வாகத்தில் நிகழ்ந்திருக்கின்ற குழறுபடிகளையும் ஊழல் மோசடிகளையும் எவ்வாறு நோக்குவது? அது, மக்களைக் குறிப்பிட்டளவு நம்பிக்கையிழக்கச் செய்திருக்கின்றது.

2017 பெப்ரவரி மூன்றாம் திகதி, தகவலறியும் உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளில் இருந்து, வடக்கு மாகாண சபையின் நிர்வாக விடயங்கள் தொடர்பில் கோரப்பட்ட தகவல்கள் ஏராளம்.

அதன்மூலம், ஆதாரபூர்வமான அறிக்கைகளினூடும் தகவல்களினூடும் வடக்கு மாகாண அமைச்சுகள் உள்ளிட்ட நிர்வாகத்துக்குள் நிகழ்ந்த குழறுபடிகள் நாளுக்கு நாள் வெளியாகி வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும், ஓடாத பிக்-அப்புக்கு (வாகனத்துக்கு) எரிபொருள் நிரப்பிய அமைச்சர்களும் கூட்டு வங்கிக் கணக்கு வைத்து சம்பள மோசடி செய்தவர்களும் அம்பலப்பட்டிருக்கின்றார்கள்.

11-1-1024x683  விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? -புருஜோத்தமன் (கட்டுரை) 11 1

முன்னாள் அமைச்சர்கள் பொ.ஐங்கரநேசன், த.குருகுலராஜா உள்ளிட்டவர்கள் மீதான முதலமைச்சரின் விசாரணைக்குழு நடத்திய அறிக்கைகளில் குற்றங்களாக காணப்பட்ட விடயங்கள் தொடர்பில், விக்னேஸ்வரன் இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் எந்தப் பதிலும் இல்லை.

பதவி விலகல் அல்லது பதவி நீக்கத்தோடு ஊழல் மோசடிகள் தொடர்பிலான விசாரணை அறிக்கையைக் கடந்துவிட வேண்டும் என்று நினைக்கிறாரா என்றும் தெரியவில்லை. அது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினால், முதலமைச்சர், கேள்வியைத் தவிர்த்துக் கொண்டு எழுந்து சென்றுவிடுகின்றார்.

ஒரு கட்டம் வரையில், அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல் சார்ந்தது என்று சமாளித்து வந்த முதலமைச்சர், தற்போதைய அமைச்சர்களுக்கு எதிராக தகவலறியும் உரிமைச் சட்டத்தின் உதவியோடு பெறப்பட்ட ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறார்?

அரசியல் ரீதியாக மாத்திரமல்ல, இராஜதந்திர ரீதியாகவும் தமிழ்த் தேசிய அரசியலில் இரா.சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் விக்னேஸ்வரன் இருந்தார். அந்த இடத்தை, சம்பந்தனும் எம்.ஏ.சுமந்திரனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பேராசிரியர் சிற்றம்பலம் உள்ளிட்டவர்களின் எதிர்ப்புகளை மீறி உருவாக்கிக் கொடுத்தனர்.

அரசியல் என்பது பெரும் எதிர்ப்புகளைச் சமாளித்து, சந்தர்ப்பங்களை வெற்றிகரமாகக் கையாளும் உத்தி. ஆனால், அதிகம் உணர்ச்சி வசப்படும் நிலையால், தன்னுடைய இடத்தை, மிக வேகமாக இழந்தார்.

images  விக்னேஸ்வரன் என்ன செய்யப் போகிறார்? -புருஜோத்தமன் (கட்டுரை) images1விக்னேஸ்வரனை வடக்கு மாகாண முதலமைச்சராக முன்னிறுத்தியமைக்கான காரணங்களில் ஒன்றாக, சம்பந்தன் பங்காளிக் கட்சிகளிடமும் மாவையிடமும் கூறியதாவது, “வடக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி என்பது மிக முக்கியமானது. தெற்கோடு மாத்திரமல்ல, சர்வதேசத்தோடு பேசுவதற்கும் முதலமைச்சராக இருப்பவருக்கு மிகுந்த அனுபவமும், ஆற்றலும் வேண்டும். அது, விக்னேஸ்வரனிடம் உண்டு” என்று.

ஆனால், தன்னுடைய தோற்றத்தினூடு தன்னையோர் ஆளுமையாக வரையறுத்துக்கொண்ட விக்னேஸ்வரன், நடவடிக்கைகளினூடு உணர்ச்சிவசப்படும் நபராக, பக்குவப்படாத அரசியல்வாதியாக வெளிப்பட்டார். அந்தத் தருணமே, சுமந்திரனை, சம்பந்தனுக்கு அடுத்த இடத்தில் வைத்தது. சுமந்திரனை அரசியலுக்கு சம்பந்தன் அழைத்து வரும் போது, கூட்டமைப்பின் இரண்டாம் பெரும் தலைமையாக உருவாக்கும் எந்த எண்ணமும் அவரிடத்தில் இல்லை.

சட்ட ரீதியிலான விடயங்களைக் கையாள்வதற்காக தேர்ச்சிபெற்ற ஒருவர் கட்சிக்குள் இருப்பதன் அவசியத்தால் சுமந்திரனை முன்னிறுத்தினார். ஆனால், விக்னேஸ்வரனை அழைத்துவரும் போது, அவரைத் தனக்கு அடுத்த அடையாளத் தலைமையாகவும் (கட்சித் தலைமையாக அல்ல) முன்னிறுத்த முனைந்தார்.

ஆனால், அடையாளத் தலைமை என்பதற்கும், மிகுந்த உழைப்பைக் கோருகின்ற கட்சித் தலைமைக்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொள்ளாமல், விக்னேஸ்வரன் தவறிய இடமே அவரின் அரசியல் ரீதியிலான தோல்விக்கு காரணமாகும்.

தான் இழந்த இடத்தைத் தமிழ் மக்கள் பேரவையின் மூலம் மீட்டெடுக்க முடியும் என்கிற எதிர்பார்ப்பு, விக்னேஸ்வரனிடம் உண்டு. ஆனால், பேரவையின் செயற்பாட்டாளர்கள் என்கிற இடத்தை, இதுவரை காலமும் மேல் மட்டத்தில் வைத்துக் கொண்டிருந்தவர்கள், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈ.பி.ஆர்.எல்.எப்., புளோட் ஆகிய கட்சிகளின் தொண்டர்கள்.

‘எழுக தமிழ்’ முதல், பேரவையின் மனித உழைப்பைக் கோருகின்ற அனைத்து விடயங்களிலும் கட்சிகளின் பங்கே அதிகமாக இருந்தன. ஆனால், பேரவைக்குள் கட்சிகள் முக்கியத்துவம் பெறுவதை விரும்பாத விக்னேஸ்வரன், புத்திஜீவிகளை மாத்திரம் வைத்துக் கொண்டு தனியாவர்த்தனம் செய்ய நினைக்கின்றார். அதன்மூலம், புதிய வெற்றிகளைப் பெற முடியும் என்றும் நம்புகின்றார்.

எனினும், விக்னேஸ்வரனின் கடந்த நான்கரை ஆண்டுகாலச் செயற்பாட்டின் வழி, தமிழ் மக்களுக்கு குறிப்பிட்டளவு தெளிவு கிடைத்திருக்கின்றது. அது, அவரை முதன்நிலைத் தலைவராக வரையறுக்கும் அளவுக்கு இல்லை என்பது வெள்ளிடைமலை.

முதலமைச்சர் என்கிற அடையாளம் இன்னமும் ஐந்து மாதங்களே இருக்கும் என்கிற நிலையில், “கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரனை இனி நியமிக்கப்போவதில்லை” என்று தமிழ் மக்களை, 2015ஆம் ஆண்டிலிருந்து சுமந்திரன் தயார்படுத்தி வருகின்றார்.

அப்படியான நிலையில், தேர்தல் அரசியலில் நீடிக்க வேண்டுமானால், கூட்டமைப்புக்கு எதிரான அணியொன்றை பலமாக உருவாக்கி அதற்கு தலைமையேற்க வேண்டும். அதன்மூலம் அரசியல் ரீதியாக குறிப்பிட்டளவான முக்கியத்துவத்தை விக்னேஸ்வரன் தக்க வைக்கலாம்.

ஆனால், அது, இராஜதந்திர ரீதியிலான முக்கியத்துவத்தைப் பெற்றுக்கொடுக்காது. ஏனெனில், கூட்டமைப்புக்கு மாற்றாக தமிழ்த் தேசிய அரசியலில் இராஜதந்திர தரப்பு என்று யாரையும் தெற்கோ, சர்வதேசமோ அடையாளம் காணவில்லை.

விக்னேஸ்வரன் தொடர்பிலான கடந்த கால அனுபவங்களும் அவ்வாறான ஒன்றைப் புதிதாகத் தோற்றுவிக்காது. கூட்டமைப்புக்கு எதிராக விக்னேஸ்வரன் தேர்தல் அரசியலில் களமிறங்கத் தயாராக இருந்தாலும், அந்தப் பாதை பூப்பாதையாக இருக்காது. அது, மிகுந்த உழைப்பைக் கோருகின்ற முட்பாதையைாகவே இருக்கும்.

இந்த ஆன்மீக அரசியல் பயணம் விக்னேஸ்வரனை கூட்டமைப்புக்குள் மீண்டும் ஐக்கியமாக்கும் காட்சிகளையும் சிலவேளை பதிவு செய்யலாம். அவ்வாறான காட்சிகள் அரங்கேறினால், அதை தமிழரசுக் கட்சியோ, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகளோ அவ்வளவு இலகுவாக ஜீரணித்துக் கொள்ளாது. அது, விக்னேஸ்வரன் மீதான அடையாள அழிப்பை அதிகமாகவே பதிவு செய்யும்.

-புருஜோத்தமன் தங்கமயில்