ஒருவரை, கொலைசெய்து அங்கு கொள்ளையடிக்கப்பட்ட பணத்தின்மூலம் தொழிலதிபர்களாக உருவான மூன்று கொலையாளிகளை, நான்கு வருடங்களுக்குப் பிறகு புதுச்சேரி போலீஸ் கைதுசெய்திருக்கிறது.
ராஜஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டவர் ராஜேஷ் ஷியாம். பல ஆண்டுகளுக்கு முன்பே குடும்பத்துடன் புதுச்சேரி வந்த இவர், நெல்லித்தோப்பு சிக்னலில் நகை அடகுக்கடை நடத்திவந்தார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3-ம் தேதி காலையில் கடையில் இருந்த ராஜேஷ் ஷியாமை கொலை செய்ததோடு, அங்கிருந்த நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது மர்மக் கும்பல்.
பட்டப்பகலில் மக்கள் நெருக்கடி மிகுந்த இடத்தில் நடந்த இந்தக் கொலைச் சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரியையும் உலுக்கியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த உருளையன்பேட்டை போலீஸார், நான்கு ஆண்டுகளாகத் தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.
ஆனாலும், குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் சந்தேகத்தின் அடிப்படையில் மூன்றுபேரைப் பிடித்து விசாரித்த போலீஸ், பின்னர் அவர்களை விடுவித்தது.
அதனால், புதுச்சேரி காவல் துறை டி.ஐ.ஜி-யான ராஜீவ் ரஞ்சன், நான்கு மாதங்களுக்கு முன்பு அந்த வழக்கை அதிரடிப் படைக்கு மாற்றினார்.
அதையடுத்து புதுச்சேரி சுப்பையா நகரைச் சேர்ந்த அருண், திருவாரூரைச் சேர்ந்த கோபிநாத், தட்டாஞ்சாவடியைச் சேர்ந்த சுயம் ஜோதி என்ற மூன்று பேர் கைதுடன் முடிவுக்கு வந்தது வழக்கு.
கொலைக்கு ஸ்கெட்ச்:
“புதுச்சேரியில் உள்ள எனது அக்கா வீட்டில்தான் சிறுவயதில் நான் வளர்ந்தேன். அப்போது என்னுடன் படித்தவர்கள்தான் சுயம்ஜோதியும், அருணும். ராஜேஷ் ஷியாம் அடகுக் கடைக்குப் பக்கத்தில் இருந்த சிமென்ட் கடையில்தான் நான் வேலை செய்துவந்தேன்.
அப்போது அடிக்கடி ராஜேஷ் ஷியாம் கடைக்குச் சென்று அவருடன் பேசிக் கொண்டிருப்பேன். அப்போதுதான் நிறைய நகைகளை அவர் அடகு பிடித்திருப்பது தெரியவந்தது.
அவற்றைக் கொள்ளையடித்தால், வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடலாம் என்று எனது நண்பர்கள் அருண், சுயம்ஜோதியிடம் சொன்னேன்.
அவர்களும் ஒப்புக்கொள்ள, அன்றைய தினம் காலையில் நாங்கள் மூன்று பேரும் ராஜேஷ் ஷியாம் கடைக்குச் சென்று அவரது கழுத்தை அறுத்துக் கொலைசெய்து லாக்கரில் இருந்த நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிவிட்டோம்.
அங்கு எனது மாமா கோகுலகிருஷ்ணன் மூலம் கொள்ளையடித்த நகை, பணத்தை மறைத்துவைத்தோம். உடனே பணத்தைச் செலவுசெய்தால் மாட்டிக்கொள்வோம் என்பதால் சிறிது காலம் அமைதியாக இருந்தோம். அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக அவற்றை எடுத்து மூவரும் செலவு செய்தோம்” என்று தெரிவித்திருக்கிறான் கொலையாளிகளில் ஒருவனான கோபிநாத்.
தொழிலதிபர்களாக உருவெடுத்த கதை:
கொள்ளையடித்த நகைகளை உருக்கி வித்த மூன்று கொலையாளிகளும் சொத்துகளை வாங்கிக் குவித்தனர். அதில் கோபிநாத் தனது சொந்த ஊரான திருவாரூரில் மிகப்பெரிய மளிகைக் கடையைத் தொடங்கியதோடு, டேங்கர் லாரி, மினி லாரி, 16 லட்சத்துக்கு வீட்டுமனை என சொகுசில் மிதந்திருக்கிறார்.
நகைகளைப் பதுக்க உதவி செய்த கோகுலகிருஷ்ணன், தனக்கு வந்த பங்கில் 14 டேங்கர் லாரிகள், 2 பேக்கரிகள், 35 லட்சத்துக்கு வீட்டு மனை என ஏரியாவில் புதுப் பணக்காரராகக் கொடிகட்டி பறந்திருக்கிறார்.
மற்றொரு கொலையாளியான அருண் கொள்ளையடித்த பணத்தை லட்சக்கணக்கில் செலவுசெய்து ஆடம்பரமாகத் திருமணம் செய்தார். திருமணத்துக்குப் பிறகு சென்னை சென்ற அவர், நகரத்தின் மையப் பகுதியில் அடுக்குமாடி வீட்டை வாங்கி அதில் குடியேறியதுடன், இரண்டு கார்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.
அதோடு தனது பட்டதாரி மனைவியை ஐ.ஏ.எஸ் படிக்கவைத்தார். அதேபோல சுயம்ஜோதி, இரண்டு மாடிவீடுகளைக் கட்டியதோடு, பல இடங்களில் வீட்டுமனைகளை வாங்கிக் குவித்தார்.
அவர்கள்தான் இவர்கள்:
சம்பவத்தன்று கோபிநாத், அருண் இருவரும் இருசக்கர வாகனத்தில் வர, சுயம்ஜோதி தனது மாமாவின் காரில் வந்திருக்கிறார். கொலைக்குப் பிறகு பக்கத்துக் கடைகளில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளை ஆராய்ந்த போலீஸிடம், இந்தக் காட்சி சிக்கியது.
பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அருண், கோபிநாத்தைப் பிடித்த போலீஸ் அவர்களிடம் விசாரணை நடத்தியது. அவ்வளவுதான்… கொதித்தெழுந்த சில அரசியல் கட்சிகளும், டுபாக்கூர் லெட்டர் பேடு அமைப்புகளும் மனித உரிமை மீறல் என்று துள்ளிக் குதிக்க, இருவரையும் அனுப்பிவிட்டது போலீஸ்.
ஆனால், புதிதாக அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் அவர்கள் இருவரிடமிருந்தே வழக்கை ஆரம்பித்தனர். அவர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தனர்.
அப்போது இவர்களின் கைகளில் அதிகமாக இருந்த பணப்புழக்கத்தைப் பார்த்ததும்… கொலையாளிகள் இவர்கள்தாம் என்பதை உறுதி செய்தனர், தனிப்படைப் போலீஸார்.
அதையடுத்தே முறையான ஸ்கெட்ச் போட்டு மூவரும் கைதுசெய்யப்பட்டனர். ஆனால், நகைகளைப் பாதுகாத்துக் கொடுத்த கோகுலகிருஷ்ணன் தலைமறைவாகிவிட்டார்.
“இந்தக் கொலையில் அரசியல் தலையீடு இருந்ததால்தான் இதுவரை குற்றவாளிகள் கைதுசெய்யப்படாமல் இருந்தனர். தற்போது நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் குற்றவாளிகளைக் கைதுசெய்துவிட்டோம்” என்று பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி.
“சி.சி.டி.வி. கேமராவில் பதிவான கார், பக்கத்துக் கடையிலேயே வேலை செய்துவந்த கொலையாளி… கொலைக்குப் பிறகு சொந்த ஊருக்குச் சென்றது, இருவரையும் பிடித்து போலீஸ் விசாரணை செய்தது என ஏற்கெனவே சரியான பாதையில்தான் வழக்குப் பயணித்தது.
ஆனால், இடையில் என்ன நடந்தது என்பது அந்த `சாமி’க்குத்தான் வெளிச்சம்” என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.