ரஷியாவுக்கு டிரம்ப் சவால்……

உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்து கிடக்கும் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் ஆதிக்கத்தில் இருந்துவரும் கிழக்கு கவுட்டா பகுதியை மீட்பதற்காக சிரியா படைகள் உச்சகட்ட தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அங்குள்ள பொதுமக்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் உயிருக்கு பயந்து வெளியேறி விட்டனர்.
கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது.
இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் நேற்று அவசரமாக கூடியது. சிரியா மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தால் தோற்கடித்தது. இதேபோல், ரஷியா கொண்டுவந்த ஒரு தீர்மானமும் தோல்வியில் முடிந்தது.
சிரியா விவகாரத்தில் எதிர்காலத்தில் கையாள தீட்டிவரும் திட்டங்களை எல்லாம் அமெரிக்கா கைவிட வேண்டும் என ஐ.நா.வுக்கான ரஷிய தூதர் இந்த கூட்டத்தின்போது எச்சரித்தார்.
இதற்கிடையில், சிரியா நாட்டின் மீது அமெரிக்கா வீசும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துவோம் என லெபனான் நாட்டுக்கான ரஷிய தூதர் அலெக்சாண்டர் ஜாசிப்கின் நேற்று எச்சரித்துள்ளார்.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அந்நாட்டு ராணுவ தளபதி முன்னர் குறிப்பிட்டதை மேற்கோள் காட்டிய அலெக்சாண்டர் ஜாசிப்கின், சிரியா மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த ஏவுகணைகளையும், அது எங்கிருந்து ஏவப்பட்டதோ, அந்த பகுதியையும் ரஷியா தாக்கி அழிக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்நிலையில், சிரியாவில் அமெரிக்க ஏவுகணைகளை எதிர்கொள்ள தயாராக இருங்கள் என ரஷியாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று சவால் விட்டுள்ளார்.
இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டிரம்ப், சிரியா மீது வீசப்படும் எல்லா ஏவுகணைகளையும், எந்த ஏவுகணையாக இருந்தாலும் சுட்டு வீழ்த்துவோம் என ரஷியா சூளுரைத்துள்ளது.
புதியதாக நல்ல வீரியம் மிக்க ஏவுகணைகள் வரப் போகின்றன. ரஷியா இதற்கு தயாராக இருக்கட்டும். சொந்த மக்களை விஷவாயு தாக்குதலால் கொன்று குவித்து, ரசிக்கும் மிருகத்துக்கு நீங்கள் கூட்டாளிகளாக இருக்க கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.