‘ப.சிதம்பரமும் நடிகர் விஜயும்தான் பிரச்னை பண்ணலை!’

எடப்பாடி பழனிசாமி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளன தி.மு.க உள்ளிட்ட கட்சிகள். ஐ.ஐ.டி வளாகத்துக்குள்ளேயே ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை பா.ஜ.கவினரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `ப.சிதம்பரம் மற்றும் நடிகர் விஜயைத் தவிர, மற்றவர்கள் இந்த அரசு கவிழ வேண்டும் என ஆசைப்படுகின்றனர்’ எனப் பேசியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

கோடை வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் காவிரிக்காகக் கொந்தளித்துக்கொண்டிருக்கிறது தமிழகம். நேற்று முன்தினம் சேப்பாக்கம் மைதானத்தை முற்றுகையிட்டு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தன அரசியல் கட்சிகளும் திரையுலகமும். இதையடுத்து, பாதுகாப்பு காரணமாக ஐ.பி.எல் போட்டிகளை வேறு மாநிலத்தில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். `எங்களால் பாதுகாப்பு கொடுக்க முடியாது’ எனத் தமிழக போலீஸார் கைவிரித்துவிட்டதை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள். இந்நிலையில், இன்று திருவிடந்தையில் நடைபெற்ற ராணுவக் கண்காட்சிக்கு வந்த பிரதமர் மோடிக்குக் கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் தீவிரமாக நடந்தது. தி.மு.க தலைவர் கருணாநிதியின் இல்லம் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்களின் வீடுகளில் கறுப்புக் கொடிகள் ஏற்றப்பட்டன. சைதாப்பேட்டை தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்ரமணியம், தன்னுடைய வீட்டு மாடியில் பிரமாண்ட கறுப்பு பலூனைப் பறக்கவிட்டார். மோடியின் கண்களுக்குக் கறுப்பு வண்ணம் தென்பட்டுவிடக் கூடாது என்பதில் ஆளும்கட்சி எச்சரிக்கையாக இருந்தது. அதையும் தாண்டி கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்துவிட்டன அரசியல் கட்சிகள்.

ப.சிதம்பரம்தமிழகம் முழுவதும் எழும் கொந்தளிப்பைக் கட்டுப்படுத்தும் வழிதெரியாமல் தவித்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைப் பற்றி தன்னுடைய ஆதரவாளர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறார். அவர் பேசும்போது, `சிதம்பரம் மற்றும் நடிகர் விஜயைத் தவிர மற்றவர்களுக்கு நான் சி.எம் ஆக இருப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், மற்றவர்களிடம்(தினகரனைச் சொல்கிறார்) கமிட் ஆகிவிட்டு நமக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். நடராஜன் சாவுக்கு நன்றி உணர்வில்லாமல் நான் வரவில்லை என்று பேசியவர்கள்தாம் இவர்கள். ஆனால், நான் நடராஜன் மரண வீட்டுக்குப் போயிருந்தால் என்னவெல்லாம் பேசியிருப்பார்கள் என்பதைப் பற்றி இவர்களுக்குத் தெரியாதா? நன்றி உணர்வைப் பற்றி இவர்கள் பேசுகிறார்கள். இந்தப் பதவி எங்களுக்கு எப்போது வந்திருக்க வேண்டியது. இந்த உண்மையை சீமானும் திருமாவளவனும் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்’ எனப் பேசியிருக்கிறார்.

`சிதம்பரத்தைப் பற்றி முதல்வர் ஏன் குறிப்பிட்டார்?’ எனக் கோட்டை வட்டாரத்தில் விசாரித்தோம். “தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள், தற்போது மூன்று பிரிவுகளாகச் செயல்படுகிறார்கள். பீட்டர் அல்போன்ஸ், கோபண்ணா உள்ளிட்டவர்கள் தி.மு.க பக்கம் நின்று பேசுகிறார்கள். சசிகலா தரப்பின் மீது அனுதாபத்தில் இருக்கிறார் திருநாவுக்கரசர். அ.தி.மு.க தரப்பின் மீது அக்கறை காட்டுகிறார் ப.சிதம்பரம். கடந்த சில நாள்களுக்கு முன்பு, சிதம்பரத்தின் தூதுவர் ஒருவர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின்போது, `மோடி அரசு உங்களுக்கு எதிராகப் போனால், காங்கிரஸ் உங்களை ஆதரிக்கும். நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. எந்த ரூபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் வந்தாலும், காங்கிரஸ் தலைமை உங்களை ஆதரிக்கும். இதுகுறித்து சோனியாவிடமும் ராகுலிடமும் பேசி கன்வின்ஸ் செய்ய வேண்டியது எங்கள் வேலை. எனவே, வரக்கூடிய நாள்களில் மோடியை எதிர்த்து நீங்கள் பேசுங்கள். மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

இதற்குப் பதில் கொடுத்த எடப்பாடி பழனிசாமி, `உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி. அப்படி நான் எதிர்த்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை. பிரதமர் மோடி எங்களுக்கு எதிராக இல்லை. நாங்கள் நடத்திய ஸ்கூட்டி விழாவுக்கு, அழைப்பின்பேரில் பிரதமர் வந்திருந்தார். இந்த அரசுக்கு எதிராகவும் பிரதமர் இல்லை’ எனத் தெளிவுபடுத்திவிட்டார். எனவேதான், இந்த அரசு கவிழ வேண்டும் என சிதம்பரம் நினைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். மெர்சல் பட விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக, விலங்குகள் நல வாரியத்தின் கிளியரன்ஸைப் பெற்றுக் கொடுத்தார் முதல்வர். அந்தவகையில்தான், நடிகர் விஜயைப் பற்றியும் குறிப்பிட்டார்” என்றார் விரிவாக.