சிரியாவிற்கு எதிரான தாக்குதலிற்கு அமெரிக்கா நாசகாரிகளையும் நீர்மூழ்கிகளையும் பயன்படுத்தலாம் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர்களை மேற்கோள் காட்டி சி.என். என். செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் சி.என்.என். மேலும் தெரிவித்துள்ளதாவது:
டொம்ஹவுக் ஏவுகணைகளுடன் இரண்டு அமெரிக்க நாசகாரிகள் உத்தரவிற்காக காத்திருக்கின்றன. அதேபோன்று அமெரிக்க ஜனாதிபதி சிரியா மீது தாக்குதலை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பித்தால் தாக்குதலை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் போர்விமானங்களும் ஏனைய ஆயுதங்களும் தயார் நிலையில் உள்ளன.
புதிய நவீன ஏவுகணைகள் சிரியாவை நோக்கி செல்லும் என அறிவித்துள்ளதன் மூலம் டிரம்ப் தனது சகாக்களை கூட ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
தாக்குதலை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்காவிற்கும் அதன் மேற்குலக சகாக்களிற்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா சிரியாவின் கடற்பகுதியில் நீர்மூழ்கிகளை நிறுத்தியிருக்கலாம் அதனை பயன்படுத்தி நவீன ஏவுகணைகளை செலுத்தக்கூடும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
டிரம்பின் சிரேஸ்ட அதிகாரிகள் வெள்ளை மாளிகையில் சிரியாவிற்கு எதிராக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்துள்ளனர்.
சிரியா மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வெள்ளை மாளிகை செயலாளர் சராசாண்டெர்ஸ் தெரிவித்துள்ளார்.
சிரியா சமீபத்தில் மேற்கொண்ட இரசாயன தாக்குதல் குறித்த புலனாய்வு தகவல்களை இன்னமும் சேகரித்து வருவதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மட்டிஸ் டிரம்ப் உத்தரவு வழங்கினால் தாக்குதலை ஆரம்பிப்பதற்கான தயார் நிலையில் அமெரிக்க இராணுவம் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை அமெரிக்காவின் செய்மதிகளும் புலனாய்வு பணிகளில் ஈடுபட்டுள்ள விமானங்களும் சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தையும் சிரியாவில் உள்ள ரஸ்ய படையணிகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
தாக்குதல் இடம்பெறலாம் என கருதப்படும் இடங்களில் இருந்து இரசாயன ஆயுதங்கள் போர்த்தளபாடங்களை சிரியாவும் ரஸ்யாவும் இடமாற்றுகின்றனவா என்பதையே அமெரிக்கா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
இதேவேளை, டிரம்ப் தாக்குதல் இடம்பெறுவது குறித்து முன்கூட்டியே அறிவித்துள்ளதன் காரணமாக அமெரிக்க அதிகாரிகள் தாங்கள் ஏற்கனவே திட்டமிட்டுள்ள இலக்குகளில் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள விமானதளங்களையும் இரசாயன ஆயுதங்கள் சேமிக்கப்பட்டுள்ள பகுதிகளையும் தாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா பயன்படுத்தக்கூடிய ஆயுதங்கள் என்ன? சிரியாவிற்கு அருகில் இரண்டு நாசகாரிகளை அமெரிக்கா நிறுத்தியுள்ள அதேவேளை, சிரியாவின் கடற்பகுதியில் அமெரிக்காவின் நீர்மூழ்கிகள் நிலைகொண்டிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இந்த நீர்மூழ்கிகளை பயன்படுத்தி அமெரிக்கா டொம்ஹவுக் குறூஸ் ஏவுகணைகளை செலுத்தக்கூடும். சிரியாவை நோக்கி அதி நவீன ஏவுகணைகள் வருகின்றன என டிரம்ப் தெரிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது.
இந்த வகை ஏவுகணைகளை செலுத்தக்கூடிய நீர்மூழ்கிகள் சிரியாவின் கடற்பகுதியில் இல்லை என கருதக்கூடாது என தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆய்வாளர் ஜோன் கேர்பி இந்த வகை நீர்மூழ்கிகள் மத்தியதரை கடலில் நடமாடுகின்றன மேற்கு ஆபிரிக்கா மீது அவை தாக்குதலை மேற்கொண்டுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.
சிரியாவும் ரஸ்யாவும் ஏற்படுத்தியுள்ள விமான பாதுகாப்பு பொறிமுறையின கண்ணில் மண்ணை தூவுவதற்கு அமெரிக்கா கட்டாரில் உள்ள தனது எவ் 22 போர் விமானங்களை பயன்படுத்தலாம்.
எனினும் விமானவோட்டிகளை பயன்படுத்துவது ஆபத்தான விடயம் என்கின்றார் கிர்பி ரஸ்ய அதிகாரிகளின் எச்சரிக்கை காரணமாக அமெரிக்கா விமானங்களை பயன்படுத்தாது நீர்மூழ்கிகளில் இருந்து அல்லது விமானங்களில் இருந்து ஏவுகணை தாக்குதலையே மேற்கொள்ளும் ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
புதிய அதிநவீன ஜே.எஸ்.எஸ்.எம். ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் கப்பல்களையும் பயன்படுத்தக்கூடும்.இரு நாடுகளும் சிரியா அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை வலியுறுத்தி வருகின்றன.