பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டதால் சென்னை போலீஸார் பதறினர்.
சென்னையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக இன்று கறுப்புக் கொடி காட்டும் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து ஆங்காங்கே உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர். இந்தநிலையில், சைதாப்பேட்டை எம்.எல்.ஏ. மா.சுப்பிரமணியன், சேகர்பாபு எம்.எல்.ஏ. ஆகியோரின் ஏற்பாட்டில் மா.சுப்பிரமணியன் வீட்டின் மாடியில் ராட்சத கறுப்பு பலூன் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்ச்சி நேரலையாகச் சமூக வலைதளத்தில் ஒளிப்பரப்பு செய்யப்பட்டது. அந்த பலூனில் `தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி கோ பேக், சென்னை தெற்கு மாட்ட தி.மு.க.’ என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தது. இது, உலகளவில் டிரெண்டானது. இதனால் கடுப்படைந்த காவல்துறையினர் பலூனை இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பலூன் விவகாரம் பரபரப்பானது. இதனால் தமிழகக் காவல்துறை உயரதிகாரிகளுக்கு மேலிடத்திலிருந்து பிரஸர் வந்தது. உடனடியாக பலூனை இறக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து மா.சுப்பிரமணியன் வீட்டுக்கு போலீஸார் விரைந்தனர். அப்போது, போலீஸாரின் வாக்கி டாக்கிகள் அலறின. அப்போது, பலூன் பறப்பதற்கு அனுமதி பெறவில்லை, தேவையில்லாத பிரச்னை ஏற்படுகிறது என்று போலீஸ் உயரதிகாரி மா.சுப்பிரமணியத்திடம் தெரிவித்துள்ளார். ஆனால், உடனடியாக பலூன் இறக்கப்படவில்லை. பிரதமர் மோடி சென்ற பிறகு பலூன் இறக்கப்பட்டது. அதன்பிறகே போலீஸார் நிம்மதியடைந்தனர்.