“எங்களின் பெண் தன்மையை உணர ஆரம்பித்த கணத்திலிருந்து, எப்படியாவது அறுவைசிகிச்சை செய்துகொண்டு, முழுப் பெண்ணாக மாற வேண்டும் என்பது மட்டும்தான் எங்களின் முதல் நோக்கமாக இருக்கும்.
அதற்காகப் பணம் சேர்க்க நாங்கள் படும் வேதனைகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. ஒருவழியாகப் பணத்தைச் சேர்த்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றால் அங்கே எங்களுக்கு நடப்பது கொடுமை.
இதற்கான அறுவைசிகிச்சையில் (Sex Reassignment Surgery – SRS) அனுபவமில்லாத மருத்துவர்களால் எங்கள் உடல் சின்னாபின்னமாக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல… இந்தியா முழுக்கவே இதேநிலைதான்’’ என்கிறார் முதல் திருநங்கை பொறியாளரான கிரேஸ்பானு.
மனதளவில், பழக்கவழக்கங்களில் பெண்ணாக மாறிவிட்ட பிறகு, உடலளவில் ஆணின் அடையாளங்களோடு இருப்பதை எந்தத் திருநங்கையும் விரும்புவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே அந்தச் சிகிச்சைக்காகப் பணம் சேர்ப்பதில்தான் அவர்களின் பாடு கழிகிறது.
திருநங்கைகள் என்றாலே `பிச்சை எடுப்பவர்கள்’, `பாலியல் தொழில் செய்பவர்கள்’ என்ற தோற்றம்தான் இருக்கிறது. ஆனால், அந்த அவலத்துக்குள் அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை. இப்படிப் பல துன்பங்களை அனுபவித்து சேர்த்த பணத்தை சக திருநங்கைகளே ஏமாற்றிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன.
“நான் சொல்றதையெல்லாம் கேட்டா, உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்’’ என்று ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட திருநங்கைகளும் இருக்கிறார்கள்.
`அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே இதற்கான அறுவைசிகிச்சை செய்கிறார்களே… அங்கு போய் செய்துகொள்ளவேண்டியதுதானே என்பது சிலரின் அறிவுரை.
ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பது அனுபவப்பட்ட திருநங்கைகளுக்குத்தான் தெரியும். சென்னை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கை சௌமியா அந்த வேதனைகளை விவரிக்கிறார்…
மனதளவில், பழக்கவழக்கங்களில் பெண்ணாக மாறிவிட்ட பிறகு, உடலளவில் ஆணின் அடையாளங்களோடு இருப்பதை எந்தத் திருநங்கையும் விரும்புவதில்லை. வீட்டைவிட்டு வெளியேறிய உடனேயே அந்தச் சிகிச்சைக்காகப் பணம் சேர்ப்பதில்தான் அவர்களின் பாடு கழிகிறது.
திருநங்கைகள் என்றாலே `பிச்சை எடுப்பவர்கள்’, `பாலியல் தொழில் செய்பவர்கள்’ என்ற தோற்றம்தான் இருக்கிறது. ஆனால், அந்த அவலத்துக்குள் அவர்கள் ஏன் தள்ளப்படுகிறார்கள் என்பதை யாரும் யோசிப்பதில்லை.
இப்படிப் பல துன்பங்களை அனுபவித்து சேர்த்த பணத்தை சக திருநங்கைகளே ஏமாற்றிய சம்பவங்களும் நடந்திருக்கின்றன. “நான் சொல்றதையெல்லாம் கேட்டா, உனக்கு ஆபரேஷனுக்கு ஏற்பாடு பண்றேன்’’ என்று ஆசைவார்த்தை காட்டி பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட திருநங்கைகளும் இருக்கிறார்கள்.
`அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே இதற்கான அறுவைசிகிச்சை செய்கிறார்களே… அங்கு போய் செய்துகொள்ளவேண்டியதுதானே என்பது சிலரின் அறிவுரை.
ஆனால், அது அத்தனை எளிதானதல்ல என்பது அனுபவப்பட்ட திருநங்கைகளுக்குத்தான் தெரியும். சென்னை அரசு மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்துகொண்ட திருநங்கை சௌமியா அந்த வேதனைகளை விவரிக்கிறார்…
`2009-ம் வருஷம் அரசு மருத்துவமனையிலதான் இந்த சர்ஜரி பண்ணிக்கிட்டேன். ஹாஸ்பிட்டலுக்குப் போனவுடனேயே எனக்கு சர்ஜரி பண்ணிடலை. அதுக்கான பிராசஸே ஒரு வருஷம் நடந்தது.
`நீங்க ஆம்பளையா… ஏன் பெண்ணாக மாற விரும்புறீங்க?’ இப்படிப் பல கேள்விகள் கேட்டாங்க. கவுன்சலிங் கொடுத்தாங்க. கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்குப் போய், கவுன்சலிங் முடிஞ்சதுக்கு அப்பறம் நல்ல மனநிலையிலதான் இருக்கேன்னு ஒரு லெட்டர் வாங்கிட்டு வரச் சொன்னாங்க. ஏழெட்டு முறை அலைஞ்ச பின்னாடிதான் அந்த லெட்டரே கிடைச்சுது.
அப்போ என்னோட சேர்த்து மொத்தம் மூணு பேருக்கு சர்ஜரி பண்ணினாங்க. அந்த ரெண்டு பேராலயும் ஆபரேஷனுக்குப் பிறகு பாத்ரூம் போக முடியலை. ரொம்பக் கஷ்டப்பட்டாங்க.
எனக்கும் அந்த இடத்துல சரியா ஆபரேஷன் பண்ணலை. அரைகுறையா செஞ்சு அந்த இடத்தையே சிதைச்சுட்டாங்க. பாத்ரூம் போக முடியாம கஷ்டப்பட்ட ரெண்டு பேரையும் நான்தான் மறுபடியும் ஹாஸ்பிட்டலுக்குக் கூட்டிட்டுப் போனேன்.
அங்கே, பெரிய கத்தியில ஜெல் தடவி அந்த இடங்களில் விட்டு எடுத்தாங்க. அந்த இடமே ரணமாகிடுச்சு. இப்போவரைக்கு அவங்க ரெண்டு பேரும் ரொம்பக் கஷ்டப்படுறாங்க.
தனியார் மருத்துவமனையில இந்த சர்ஜரி பண்றதுக்குப் பணம் இல்லை, கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல ஒழுங்கா பண்ணுவாங்கனுதான் அங்கே போனோம். ஆனா, இப்பவரைக்கும் வேதனையை அனுபவிச்சுட்டிருக்கோம்’’ என்கிறார் சௌமியா.
இந்த அறுவைசிகிச்சை குறித்து திருநங்கை பானு கொஞ்சம் விளக்கமாகப் பேசுகிறார்…
“இந்தச் சிகிச்சையில் மொத்தம் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகள் இருக்கின்றன. இவற்றில் டைப் 3 அறுவைசிகிச்சை செய்துகொண்டால் மட்டும்தான் துணையுடன் உடலுறவு வைத்துக்கொள்ள முடியும்.
மற்ற இரண்டு முறைகளில் சிகிச்சை எடுத்துக்கொண்டால் உடலுறவு சாத்தியப்படாது. அரசு மருத்துவமனைகளில் டைப் 1 அறுவைசிகிச்சையை மட்டுமே செய்கிறார்கள்.
தனியார் மருத்துவமனைகளில் மூன்றுவிதமான அறுவைசிகிச்சைகளும் செய்கிறார்கள். அரசு மருத்துவமனையோ, தனியார் மருத்துவமனையோ இந்தியாவில் இந்த அறுவைசிகிச்சையில் பலருக்கும் போதிய அனுபவமில்லை.
எங்களைப் போன்ற பலரின் உடலுறுப்புகளைச் சிதைத்துவிடுகிறார்கள். சர்ஜரிகள் முழுமையாக இருப்பதில்லை. ஆனால், தாய்லாந்து போன்ற சில நாடுகளில்தான் மிகச் சரியாகவும் முழுமையாகவும் செய்கிறார்கள். ஆனால், அவ்வளவு தூரம் போய், பணம் செலவழிக்கும் நிலையில் இங்கு யாரும் இல்லை.
`திருநங்கைகள் கொடூரமாக நடந்துகொள்கிறார்கள்; தவறு செய்கிறார்கள்’ என்று குற்றம் சாட்டுபவர்கள், எங்களின் வலிகளை, வேதனைகளைப் பற்றிப் பேசுவதில்லை.
இந்த வலிகளோடுதான் எங்களில் பலர் பாலியல் தொழில் செய்கிறார்கள். எங்களுக்கு இதுபோன்ற பொருளாதாரத் தேவைகள் ஏற்படுவதால்தான், எங்களில் பலர் தவறான பாதையில் செல்லவேண்டிய தர்மசங்கடம் உண்டாகிறது. அரசு வழங்கும் மருத்துவக் காப்பீடும் திருநங்கைகளுக்குக் கிடையாது.
தனியார் மருத்துவமனையில் இந்தச் சிகிச்சைக்கு எழுபதாயிரம் ரூபாய்க்கும் மேல் செலவாகும். அரசு மருத்துவமனையில் செய்துகொள்ளும் வாய்ப்பிருப்பதால், பணச் செலவு கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ஆனால், அரசு மருத்துவமனைகளிலும் எல்லாமே இலவசமாகக் கிடைப்பதில்லை. அறுவைசிகிச்சைகள் செய்யத் தேவையான உபகரணங்களை நாங்கள்தான் வாங்கிக் கொடுக்கிறோம்.
அதற்கே ஏழாயிரம் முதல் எட்டாயிரம் ரூபாய்வரை செலவாகிறது. முன்பெல்லாம், இந்தச் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்குச் சென்றால், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கும் சிகிச்சைகளை எங்களுக்கு அளிப்பார்கள். நாங்கள் போராடி அந்த விதிமுறைகளை நீக்கவைத்தோம்.
அரசு மருத்துவமனைகளில் எங்களுக்கு அறுவைசிகிச்சை செய்யும் மருத்துவர்களில் பலருக்குப் போதிய அனுபவம் இருப்பதில்லை. எங்களை சோதனை எலிகளைப் போலப் பயன்படுத்துகிறார்கள்.
எங்களை வைத்து மாணவர்களுக்குப் பாடம் எடுப்பார்கள். சில நேரங்களில் மருத்துவ மாணவர்களே சர்ஜரி செய்வதும் உண்டு. இது எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலைத் தரும்.
எங்களுக்கு உயிர்வலி தரும் இந்த அறுவைசிகிச்சைக்கு நல்ல அனுபவமுள்ள மருத்துவர்களை தமிழக அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும் அல்லது மருத்துவர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியாவது பயிற்சிபெறச் செய்ய வேண்டும். எங்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளையும் அரசே செய்துதர வேண்டும்.
எங்களுக்கும் பசி, காதல், களிப்பு… என எல்லா உணர்வுகளும் இருக்கின்றன. அவற்றை முழுமையாக அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் மட்டும் தரப்படுவதில்லை. உடலாலும் உணர்வாலும் நாங்கள் மிகுந்த துயரங்களை அனுபவிக்கிறோம்’’ என்கிறார் கிரேஸ்பானு.
சுகாதார வசதிகளைப் பொறுத்தவரை தமிழ்நாடு முன்னேற்றம் பெற்றிருக்கிறது என்று ஒருபுறம் மார்தட்டிக்கொள்கிறோம்; மறுபுறம் நம் சமூகத்தின் சக அங்கமான திருநங்கைகள் தங்களின் உடல் மாற்றம் பெறுவதற்கான அடிப்படை மருத்துவ வசதிகளுக்கே அல்லாடுகிறார்கள்.
அரசு நினைத்தால் இவர்களின் தலைவிதியை மாற்றலாம், செய்யுமா?