மன்னார்குடியில் விநோத கட்டுப்பாடு!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. அனைத்துக்கட்சியினரும் ஒன்று திரண்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு இப்பிரச்னை பெரியளவில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

மீன்

மன்னார்குடி மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான எண்ணிக்கையில் குளங்கள் உள்ளன. இங்கு ஏராளமான மீன்கள் இருக்கின்றன. இதனால் மன்னார்குடி நகருக்குள் பல்வேறு இடங்களில் மீன் விற்பனை களைகட்டுவதுண்டு. இதனால் மீன் வளர்ப்பு விவசாயிகள், வியாபாரிகள் மட்டுமல்லாமல் மீன் பிரியர்களும் பலன் அடைந்து வந்தார்கள். இந்நிலையில்தான் மன்னார்குடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். `பொதுமக்கள் மீன் வாங்கறதுக்கு வசதியாக ஆங்காங்கே சின்னச் சின்ன மீன்கடைகள் இருந்துச்சு. இதனால் சிறிய அளவிலான சில்லறை மீன் வியாபாரிகள் பிழைப்பு நடத்திக்கிட்டு இருந்தாங்க. இதை நம்பித்தான் அவங்களோட குடும்பங்கள் இருக்கு.

ஆனால், இதைப்பத்தியெல்லாம் கொஞ்சம் கண்டுக்காம, நகராட்சி அதிகாரிகள், புதிதாக மீன் விற்பனைக் கூடத்தை உருவாக்கி தனியாருக்கு ஏலம் விட்டாங்க. அந்தத் தனியார் மட்டுமே பெரிய அளவில் லாபம் சம்பாதிக்கணுங்கற ஒரே நோக்கத்துக்காக, மன்னார்குடியில் வேற யாருமே மீன் விற்பனை செய்யக் கூடாதுனு கட்டுப்பாடு விதிச்சிருக்காங்க. தமிழ்நாட்டுல வேறு எங்கேயும் இது மாதிரியான முட்டாள்தனமான கட்டுப்பாடு கிடையாது. இதனால் பொதுமக்களுக்கும் பல வகைகள்ல பின்னடைவு. இதே நிலை நீடிச்சுதுனா, அனைத்துக்கட்சிகளும் ஒன்று சேர்ந்து தொடர் போராட்டங்களை நடத்தவும் தயாரா இருக்காங்க” என்கிறார்கள் இப்பகுதி மக்கள்.