முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை சார்ந்ததே அன்றி இராணுவத்திற்கு உரியதல்ல என சுட்டிக்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 2009ல் நடைபெற்ற யுத்தத்திற்குப் பின்னர் மீள்குடியேற்றம் நடைபெற்றபோது பல்லாயிரக்கணக்கான சிறுவர்களின் நலன்கருதி, ஏற்கனவே கல்வித்திணைக்களங்களின் மேற்பார்வையில் நடாத்தப்பட்டுவந்த பல முன்பள்ளிகள் இராணுவத்தினரின் CSD என்னும் படைப் பிரிவினரால் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தப்பட்டு, அங்கு கற்பிக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளங்கள் அறிவிக்கப்பட்டு முற்றாக இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம் இம் முன்பள்ளிகளில் கல்விகற்கும் சிறுவர்கள் ஊளுனு இலட்சினையும், அந்தந்த இராணுவப் படைப்பிரிவினரின் இலட்சினையும் பொறிக்கப்பட்ட சீருடைகளுடன் வருகைதர வேண்டுமென கட்டாயப்படுத்தப்படுவதுடன், அத்தகைய சீருடைகளை வழங்குவதற்காக பெற்றோர்களிடமிருந்து அறுநூறு ரூபாவுக்கு மேற்பட்ட பணத்தொகையும் அறிவீடுசெய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக உலக வரலாற்றில் எங்குமே இல்லாத வகையில் ஆரம்பக் கல்வியையே இராணுவ மயப்படுத்தி உலகச் சிறுவர் உரிமைச் சட்டங்களையும், மனிதாபிமான அடிப்படை நியமச் சட்டங்களையும் மீறி பச்சிளம் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் இராணுவ மயப்படுத்தப்பட்ட கல்விமுறையை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிலும் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில்
திணிக்கப்படுகின்றமையானது இன ஒடுக்குமுறையின் இன்னொரு வடிவமாகவே தென்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பல தடவைகள் எடுத்துக்கூறியும், தங்களுக்கு கடிதங்கள் மூலம் நேரடியாக தெரியப்படுத்தியும் தாங்கள் பாராமுகமாக செயற்படுவதை எம் இனத்திற்கு இழைக்கப்படும் அநீதியாகவே கருத முடியும்.
இந்நிலையில் தற்போது அந்த முன்பள்ளிகளில் கற்பிக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இராணுவப் பயிற்சி பெற கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சியை வழங்க வேண்டிய பொறுப்பு கல்வித்துறை சார்ந்ததே அன்றி இராணுவத்திற்கு உரியதல்ல என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
சிறுவர் உரிமைகளையும், அடிப்படை மனித உரிமைகளையும் மீறிய முறையில் இராணுவச் சீருடையுடனேயே தலைமைத்துவப் பயிற்சிக்கு வருகைதர வேண்டும் என்று முன்பள்ளி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள்.
தாங்கள் இந்நாட்டின் தலைவர் என்ற வகையிலும், பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையிலும் தொடர்ந்தும் இவ்விடயத்தில் கவனம் செலுத்தாது இருப்பது கவலைக்குரியது.
கலாசார ரீதியாக, பொருளாதார ரீதியாக, பண்பாட்டு ரீதியாக, மொழி ரீதியாக, நிலங்களை அபகரிப்பதன் ஊடாக தமிழ்த் தேசிய இனத்தை சுத்திகரிக்கும் நடவடிக்கைகளில் ஒன்றாகவே முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வலுக்கட்டாயமாக வழங்க்ப்படும் இராணுவப் பயிற்சியும் அமைகிறது.
ஒரு இனத்தின் அடிப்படை மூலாதாரமான கல்வி உரிமையை பறிப்பதனூடாக அந்த இனக்குழுமத்தின் அடையாளம் அழிக்கப்படும் என்பதை அறிந்து, அவ்வாறான செயற்பாடுகளை இந்த நாட்டில் அரங்கேற்றி வருவதற்கு நல்லிணக்கம் பற்றிப் பேசும் தங்களின் அரசு ஆதரவளிப்பது வேதனையளிக்கிறது.
தலைமைத்துவப் பயிற்சி என்ற போர்வையில் வழங்கப்படும் இராணுவப் பயிற்சியை நிறுத்தி முன்பள்ளி ஆசிரியர்கள் அந்தந்த மாகாண கல்வி அமைச்சுக்களுக்குக் கீழ் அதே சம்பளங்களோடு பணிபுரியவும், முன்பள்ளிச் சிறுவர்கள் உடல், உள ரீதியான தாக்கங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் உள்ளாகாது சுயாதீனமான முறையில் தமது கற்றல் செயற்பாடுகள மேற்கொள்ளவும் ஏற்பாடு செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என அதில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.