இங்கிலாந்து பாதிரியார் பாலியல் புகாரில்!

பாலியல் புகார் தொடர்பாக இங்கிலாந்தைச் சேர்ந்த பாதிரியார் மீது வள்ளியூர் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாலியல் புகார் - தீர்ப்பு

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள சின்னம்மாள்புரம் என்ற கிராமத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதான் ராபின்சன் என்பவர் கிரேல் டிரஸ்ட் என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வந்தார். இந்த இல்லத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுவனை வெளிநாட்டில் படிக்க அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய ஜோனதான் ராபின்சன், அந்தச் சிறுவனை சென்னை, டெல்லி, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார்.

இதுதொடர்பாக அவரின் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ள லண்டனுக்கு தொடர்ச்சியாக புகார்கள் சென்றதால், அந்த நிறுவனம் சார்பாக பெங்களூருவில் உள்ள ஜஸ்டிஸ் அன்ட் கேர் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்தை விசாரிக்க உத்தரவிட்டது. அந்த விசாரணையில் பாலியல் புகார் அனைத்தும் உண்மை என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து பெங்களூரு நிறுவனத்தினர், வள்ளியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக ஜோனதான் ராபின்சன் மீது வள்ளியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜோனதான் ராபின்சன் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். அதனால் அவரைப் பிடிக்க முடியவில்லை. இந்த வழக்கு வள்ளியூரிலுள்ள நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ஜோனதான் ராபின்சனுக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, இண்டர்போல் உதவியுடன் அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தான் கைதாவதில் இருந்து தப்பிக்கும் நோக்கத்துடன், தன் மீது தொடரப்பட்ட முதல் தகவல் அறிக்கையையும், வழக்கையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால், அந்த மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவரை வள்ளியூர் நீதிமன்றத்தில் சரண் அடைய உத்தரவிட்டது. அதனால் ஜோனதான் ராபின்சன், வள்ளியூர் நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டு ஜனவரி 4-ம் தேதி சரண் அடைந்தார்.

பாதிரியார் ஜோனதான் ராபின்சன்

கடந்த மூன்று ஆண்டுகளாக வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. வள்ளியூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் ஜோனதான் ராபின்சன் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக 3 வருடம் சிறைத் தண்டனையும் 6000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தமிழகத்தில் தண்டனை வழங்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.