வலி. வடக்கில் நேற்று 683 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக் கும் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்கவுக்கும் நன்றி தெரிவித்து அவர்களின் படங்களைத் தாங்கியபடி அலகு குத்தி காவடி எடுத்தார் ஒருவர்.மயிலிட்டியைச் சேர்ந்த மு. இன்பராசா என்பவரே இவ்வாறு காவடி எடுத்தார். மயிலிட்டி கண்ணகை அம்மன் ஆலயத்தில் இருந்து அவரது குலதெய்வமான முலவை காளி கோயிலுக்கு அவர் காவடி எடுத்தார்.ஜனாதிபதி மைத்திரி, தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க ஆகியோருடைய படங்களைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு அலகு குத்தி காவடியுடன் அவர் நடந்து சென்றமை பார்ப்பதற்கு விநோதமான காட்சியாக இருந்தது.
‘‘28 வருடங்களுக்குப் பின் எமது சொந்த இடங்களுக்குச் செல்கிறோம். ஒரு கனவு நனவாகியது போல உள்ளது. முக்கியமாக மகேஷ் சேனநாயக்க கடவுள் போல இருந்து எமக்கு இந்த உதவியைச் செய்துள்ளார். எனவே அனைவருக்கும் நன்றி செலுத்தும் வகையில் நான் இதனை ஒரு நேர்த்தியாக மேற்கொள்கின்றேன்” என்றார் இன்பராசா.