கடந்த 1940களின் ஆரம்பத்தில் மலேசிய நாட்டில் பிறந்த தந்தை செல்வா ஈழத்தமிழர்களுக்கு தலைமை தாங்க முன்வந்தார். அவருக்கு முன்பிருந்த கொழும்பை மையப்படுத்திய தலைமைகளான சேர்.பொன்.இராமநாதன், சேர்.பொன்.அருணாசலம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் ஆகியோர் தமிழர்களின் வாழ்வியலோடு நெருங்கிய தலைமைகளாக அமைந்திருக்கவில்லை.
அவர்களுக்குப் பின்வந்த தந்தை செல்வா தமிழர்களின் அபிலாசைகளை மதித்து, அவர்களுடைய சுயாட்சிக் கொள்கையைக் கடைப்பிடித்த போதும் அவரைத் தொடர்ந்து கட்சியை வழிநடத்திய யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு தோற்றம் பெற்ற தலைமைகள் பேரம் போன தலைமைகளாகவே மாறியிருந்தன.
ஆனால், இந்த நாட்டில் 1980களில் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திப் போராடியதும்,2009களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டதும் வரலாற்றில் நாம் கண்ட கசப்பான உண்மைகள்.
அந்த நீண்ட நெடும் போராட்டத்தை வழிநடத்திய தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கவர்ச்சிகரமான தலைவராக தமிழர்களால் அடையாளப்படுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.
ஆனாலும், சர்வதேச ஒழுங்குகளையும் பன்னாட்டு அரசியல் பரிமாணங்களையும் தனக்கு சாதகமாக வகுத்து சர்வதேச மற்றும் பிராந்திய அதிகாரமையங்களின் சூழ்ச்சிகளுக்கு ஈடுகொடுக்க முடியாமையினால் அவரது ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்டது.
அவருக்குப் பின்னர் அவரால் சுட்டிக்காட்டப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு சரியான வெளிப்படைத் தன்மையை சொல்லத்தவறிய காரணத்தாலும், கொண்ட கொள்கை, இலட்சியப் பயணம் என்பவற்றை “இராஜதந்திரம்” என்ற சொல்லுக்குள்ளால் சிதைத்துவிட்டு இன்றைய அரசியல் செல்நெறியில் தடம்புரண்டு நிற்பதாக தோன்றுகிறது.
இதே கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் ஈர்ப்பை பெற்றவராக இருந்தும் தனக்குக்கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தன்னுடைய தலைமைத்துவ ஆளுமையை வெளிப்படுத்தத் தவறி ஒரு கலகக்காரராக, தமிழரின் அரசியல் சூனியத்தை ஆரம்பித்திருக்கிறார்.
அவருக்குத் துணைபோகும் வகையில் இன்னொரு நிகழ்ச்சி நிரலை உருவாக்கிக் கொண்டு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் தமிழ்த் தேசியம், தமிழர்களுக்கான வாழ்வு, சுயாட்சி என்பவற்றை சிதைக்கும் முயற்சியில் மிகத்தெளிவாகப் பயணிக்கிறார்.
அவரது ஆழ் மன எண்ணமெல்லாம் விடுதலைப் புலிகளை குற்றவாளிகளாக்குவதும், நடந்து முடிந்த ஆயுதப் போராட்டத்தை மலினப்படுத்துவதும், விடுதலைப்புலிகள் ஆயுதப்போராட்டம் நடத்தி பெறமுடியாத ஒன்றை தான் பெற்றுத்தந்துவிட்டது போன்ற மாயையை உருவாக்குவதுமே அந்த ஜனாதிபதி சட்டத்தரணிக்கு வழங்கப்பட்டுள்ள நிகழ்ச்சிநிரலாகும்.
அதேநேரம் இரண்டு தேசம், ஒரு நாடு என்று கூறி தாங்கள் தான் 24 கரட் என்று கூறும் கஜேந்திரகுமார் இரண்டு தேசம், ஒரு நாடு என்ற கொள்கையைக் காற்றில் பறக்கவிட்டு , சாப்பாட்டுக்கு வழியில்லாதவர்கள் தான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளிகளாக இணைந்தார்கள் என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ளார்.
இம்மூவருமே கொழும்பிலே பிறந்து வளர்ந்து, கொழும்பிலேயே படித்து சட்டத்தரணிகளாகி தமது தொழிலை ஆரம்பித்தவர்களே!
ஈழ விடுதலைப் போராட்டத்தில் நிகழ்ந்தேறிய கோரச் சம்பவங்களும் அதற்காக தமிழர்கள் சிந்திய இரத்தமும், கண்ணீரும், விலையாய்க் கொடுத்த உயிர்களும், சதைகளும் பற்றி இவர்களுக்கு துளியளவேனும் தெரிந்திருக்க நியாயமில்லை.
இவ்வாறான கொழும்பை மையப்படுத்திய தலைமைகளால் கேட்பதற்கு நாதியற்ற இனமாக தமிழினம் இன்று தெருவுக்கு வந்திருக்கிறது.
இந்தநேரத்தில் தன்னுடைய அந்திமக் காலத்தை நெருங்கும் சம்பந்தன் 2001களில் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனால் தமிழர்கள் மத்தியில் உருவாக்கப்பட்ட ஒற்றுமையை பதினேழு வருடங்களின் பின் மீண்டும் தமிழர்களிடம் ஏற்படுத்த வழிசமைக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைவராக விக்னேஸ்வரனையும், வடக்கு மாகாணத்தின் முதலமைச்சராக மாவை.சேனாதிராசாவையும், தமிழ்த் தேசியத்தை நேசிக்கின்ற தமிழர்களின் சுயாட்சியை ஏற்கின்ற இம் மண்ணிலே இன அழிப்பு நிகழ்ந்தது என்பதை ஏற்று நியாயம் கேட்கின்ற கட்சிகளையும் இணைத்து ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை உருவாக்க வேண்டும்.
இல்லையேல் தமிழினம் மீண்டும் சவக்குழிக்குள் தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை. முதல்வர் விக்கியும் கேட்பார் புத்தியைத் தவிர்த்து எல்லோரது கருத்துக்களையும் அனுசரித்து சுயபுத்தியுடன் அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்துச் செயற்படும் தலைமைத்துவ வழிக்கு தன்னை தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சுமந்திரனும் தன்னுடைய கல்வி அறிவுக்கு அப்பாற்பட்டு எந்த நேரமும் எதையும் பேசி, தமிழ் மக்களது தேசிய உணர்வுகளை மழுங்கடித்து அவர்களை குழப்ப நிலைமைக்குள் தள்ளாது, தன்னால்மட்டும் முடியும் என்ற அகங்காரங்களைக் கைவிட்டு தான் இழைத்த தவறுகளை ஏற்று, அதிலும் குறிப்பாக யாழ். மாநகர சபைக்கு ஆர்னோல்டை மேயராக்கியது எத்தகைய அரசியல் வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதை உணர்ந்து புதிய அரசியல் பாதையொன்றினூடான பயணத்திற்கு தயாராக வேண்டும்.
அதேபோன்று கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் தன்னோடுள்ள அட்டமத்துச்சனிகளை தள்ளிவைத்துவிட்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வசைபாடும் கொள்கைப்பிரகடனத்தைத் தவிர்த்து தமிழ்த் தேசியக் கொள்கையை நிலைநாட்ட முன்வர வேண்டும்.
அப்போது தான் தம்மரபுவழிக் கொள்கைகள், அபிலாசைகளுக்கான அரசியல் பயணத்தில் இனிவரும் காலங்களிலாவது தமிழர்கள் நேரானதொரு மாற்றத்தை அனுபவிக்க முடியும்.
கட்டுரை – பிரம்மஞானி
pirammagnani@gmail.com
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Dias அவர்களால் வழங்கப்பட்டு 13 Apr 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை Dias என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.