சூரியனின் வடக்கு நோக்கிய தொடர்பான இயக்கம் காரணமாக ஏப்ரல் 05 முதல் 15 திகதி வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு மேலாக உச்சம் கொடுக்க உள்ளது.
இதன்படி, நாளை நண்பகல் 12.10 அளவில், வட்டுக்கோட்டை, சுன்னாகம் மற்றும் அந்தணன்திடல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சத்தில் காணப்படும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது பிற்பகல்வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும்.
தென் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக மேல், வடமேல், சப்ரகமுவ, தென்,மத்திய, மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் ஏறத்தாழ 100மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சியும் எதிர்பார்க்கப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.