நேற்றைய தினம் புதுக்குடியிருப்பு பகுதியில் மரணமான ஒருவர் தொடர்பில் வெளிவரும் உண்மைகள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட இடைக்கட்டு குளத்தில் காவற்துறை துரத்திச்சென்றபோது ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது

நேற்று மாலை இடைக்கட்டு குளத்தின் அலைகரை பக்கம் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியை தடுக்கும் முகமாக சுற்று நடவடிக்கையை மேற்கொண்ட காவற்துறை, குளத்து கரையில் நின்ற 3 நபர்களை, காவற்துறை துரத்தி சென்றுள்ளனர்.

துரத்தி சென்றபோது மூவரும் குளத்தில் குதித்துள்ளனர்.

இந்நிலையில் ஒருவர் நீரில் மூழ்கியுள்ளார், மற்றுமொருவர் நீந்தி தப்பிக்க, மூன்றாம் நபர் நீந்தமுடியாது காவற்துறையிடம் மீள வந்து சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், ஒருவர் நீரில் மூழ்கி பலியாக அவர் மூழ்கிய இடத்தை காட்டிவிட்டு, சரணடைந்தவரையும் விட்டுவிட்டு காவற்துறை சென்றுவிட்டதாக காவற்துறையில் சரணடைந்து அவர்களால் விட்டுச்சென்றவர் தெரிவித்தார்

இரண்டு மணிக்கு நீரில் மூல்கியவரை மாலை 6 மணியளவில் அயலவர்கள் தேடி மீட்டபோதும் காவற்துறை சம்பவ இடத்துக்கு வருகைதராததால் அங்கு குழப்பநிலை தோன்றிய போது அங்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் காவற்துறைக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இதற்கமைய இரவு 8 மணியளவில் குறித்த பகுதிக்கு காவற்துறை வருகைதந்து உடலத்தை மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்

சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு காவற்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

காவற்துறை துரத்தி செல்லும் போது நீரில் மூழ்கிய அவரை அவ்வாறே விட்டு சென்றதாகவும் குற்றம் செய்திருந்தாலும் கூட அவர்கள் துரத்தியதால் நீரில் மூழ்கியவரை மனிதாபிமான அடிப்படையில் காப்பாற்ற முயற்சிக்க வில்லை, இது காவற்துறையின் அநாகரிக செயல் என மக்கள் மற்றும் அவ்விடத்திற்கு வருகைதந்த வடமாகாண சபை உறுப்பினர் ஆ புவனேஸ்வரன் ஆகியோர் குற்றம் சுமத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.