புன்னாலைக்கட்டுவனில் 54 வயது குடும்பஸ்தரின் மகத்தான சாதனை! (Video)

யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதியில் ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் தன் தலைமுடியினால் கட்டி இழுத்து குடும்பஸ்தரொருவர் சாதனை படைத்துள்ளார்.

புன்னாலைக்கட்டுவன் பறக்கும் கழுகு விளையாட்டுக் கழகத்தின் 43 ஆவது வருட நிறைவை முன்னிட்டும், தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டும் புன்னாலைக்கட்டுவன் ஆயக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கருகில் நேற்று சனிக்கிழமை(14) பிற்பகல் கலாசாரப் பெருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இதன் ஒருகட்டமாக சாகச நிகழ்வு புன்னாலைக்கட்டுவன் சித்திவிநாயகர் வித்தியாலயத்திற்கருகில் பலாலி பிரதான வீதியில் பிற்பகல்-05 மணியளவில் ஆரம்பமாகியது.

இதன் போது யாழ். தையிட்டியைச் சொந்தவிடமாகக் கொண்டவரும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வருபவருமான 54 வயதுடைய செல்லையா திருச்செல்வம் ஹைஏஸ் வாகனத்தில் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்ட கயிற்றைத் தனது பின்னம் தலைமுடியில் முடிச்சுப் போட்டுத் தொடர்ச்சியாக ஹைஏஸ் வாகனத்தை ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சாதனை படைத்துள்ளார்.

அங்கு கூடியிருந்த இளைஞர்கள், யுவதிகள்,சிறுவர்கள் உள்ளிட்டோர் ஆரவாரம் செய்து குடும்பஸ்தரின் சாதனை முயற்சியை வரவேற்றனர்.

ஆரம்பத்தில் தலைமுடியால் ஹைஏஸ் வாகனத்தை இழுத்தவாறு நடந்து சென்ற செல்லையா திருச்செல்வம் இடைநடுவில் வாகனத்தை இழுத்தவாறு வேகமாக ஓடிச் சென்ற காட்சி அங்கு கூடியிருந்த அனைவரையும் வியக்க வைத்தது.

சாதாரணமாகச் சென்ற இளைஞர்கள் கூட அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது சிரமப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அவரது சாதனையை முயற்சியை வீதியால் சென்றவர்களும் மிகுந்த ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.

புன்னாலைக்கட்டுவன் ஐயனார் ஆலயத்திற்கருகில் மேற்படி குடும்பஸ்தர் தனது சாதனை முயற்சியை நிறைவு செய்து கொண்டார்.

குறித்த சாதனை தொடர்பில் சாதனையாளரான செல்லையா திருச்செல்வத்திடம் வினாவிய போது அவர் பகிர்ந்து கொண்ட கருத்துக்கள் வருமாறு,

எனக்குப் பலவருடங்களாகவே சாதனைகள் செய்ய வேண்டுமென்ற ஆர்வமிருந்தது. பல தடவைகள் முயற்சித்த போதும் ஆரம்பத்தில் எனக்கு வெற்றி கிட்டவில்லை. கடந்த ஒரு வருடத்தில் வடிரக வாகனம் மற்றும் பெரிய உந்துருளி ஆகியவற்றை என் தலைமுடியில் கட்டி சுமார் இருநூறு மீற்றர் தூரம் இழுத்துள்ளேன்.

ஆனாலும், இன்று நான் மேற்கொண்ட சாதனை பெரும் சாதனை என்றே கருதுகின்றேன். ஒரு கிலோ மீற்றர் தூரம் இடைவிடாது ஹைஏஸ் வாகனத்தை என் தலைமுடியினால் இழுத்துச் சாதனை படைத்துள்ளேன்.

எனது அடுத்த கட்ட இலக்கு என் தலைமுடியினால் ஹைஏஸ் வாகனத்தை இரண்டு கிலோ மீற்றர் தூரம் இடைவிடாது இழுத்துச் சாதனை படைப்பதேயாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.