தமிழ்த் தேசியத்தின் பெயரால் ஆட்சி அமைத்த எங்களை எந்தவொரு சக்தியும் விலைபேசிவிடமுடியாது என சாவகச்சேரி நகரசபையின் உபநகர பிதா பாலமயூரன் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக இயங்கி வந்த கொல்களம் ஒன்று அண்மையில் சாவகச்சேரி நகராட்சி மன்றத்தினால் கண்டுபிடிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தாமல் இருக்குமாறு அமைச்சர் ஒருவர் நகராட்சி மன்றத்துக்கு அழுத்தம் வழங்குவதாகவும் தவிசாளரிடம் கோருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளமை தொடர்பாக நேற்றைய தினம் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
சாவகச்சேரி நகராட்சி மன்றத்திலே இன, மத, மொழி பாகுபாடின்றி அனைவருக்கும் சரிநிகர் சமனான வகையிலேயே எமது பணிகள் உள்ளன. யாரும் எங்களை கேள்விக்கு உட்படுத்தாத வகையிலேயே எமது கடந்தகால ஆட்சியை வழங்கியிருந்தோம்.
அதே போலவே மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சி எங்களுக்கு ஆதரவான தரப்பினருடன் நேர்மையாக துணிச்சலோடு நடத்தப்படுகின்றது.
போலித் தமிழ்த் தேசியம் பேசி எதற்குமே பிரயோசனம் இல்லாத உறுப்பினர்களை விலைக்கு வாங்கினாலும் எங்களை எவரும் விலை பேச முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.