கொழும்பில் வசித்து வந்த கிளிநொச்சியைச் சேர்ந்த குடும்பத் தலைவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபரை கடந்த 12ஆம் திகதி முதல் காணவில்லை என அக்கராயன் பொலிஸ் நிலையத்தில் அவரது மனைவி விஜயகுமாரி நேற்று முறைப்பாடு செய்துள்ளார்.
கிளிநொச்சி, ஆனைவிழுந்தானைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 46 வயதுடைய வேலாயுதம் விக்கினேஸ்வரன் என்பவரே காணாமல் போயுள்ளார்.
கொழும்பில் பணியாற்றும் இவர் கடந்த 12ஆம் திகதி வீடு திரும்பவுள்ளதாக தனது மனைவியிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும், அவரது தொலைபேசி செயலிழந்துள்ளதாகவும் அவரது மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர் கொழும்பில் பணியாற்றிய நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட போது, “11ஆம் திகதியுடன் அவர் பணிக்கு வரவில்லை” என பதில் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடு சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என அக்கராயன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.