சென்னையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில், எஸ்கலேட்டரில் சிக்கிய சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகன் நவீன். இந்தச் சிறுவன், கடந்த 10-ம் தேதி, தனது குடும்பத்தினருடன் ராயப்பேட்டையில் உள்ள ஒரு வணிக வளாகத்துக்குச் சென்றுள்ளான். நவீன், தனது கைப்பையைத் தோளில் மாட்டியபடி வேடிக்கை பார்த்துக்கொண்டே முதல் தளத்திலிருந்து இரண்டாவது தளத்துக்கு எஸ்கலேட்டரில் ஏறினான். அப்போது, எதிர்பாராத விதமாக அவரது பை எஸ்கலேட்டரில் மாட்டிக்கொண்டது. அதனால், இரண்டாவது தளத்திலிருந்து தரைத் தளத்துக்கு தூக்கி வீசப்பட்டான்.
மேலிருந்து தூக்கி வீசப்பட்டதால், நவீனுக்கு பலத்த அடிப்பட்டது. உடனடியாக மீட்கப்பட்ட சிறுவன், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவந்தான். கடந்த 5 நாள்களாக மருத்துவமனையில் இருந்த சிறுவன், நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தான். இதையடுத்து, வணிக வளாகத்தின் கவனக் குறைவு காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாக, அதன் நிர்வாகத்தின்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.