“வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!”

ஹிட்லர் என்ற சர்வாதிகாரி பிறந்த நான்கு நாட்களுக்கு முன் ஒரு குழந்தை, போட்டிகள் நிறைந்த இவ்வுலகை அடையாளம் கண்டது. பின்னாட்களில், நகைச்சுவையின் முகவரியாகத் திகழப்போவதை அறிந்திராத அக்குழந்தை சார்லஸ் சாப்ளின் – ஹன்னா சாப்ளின் என்ற தம்பதிக்கு மகனாகப் பிறந்ததது.

பல நடிகர்களுக்கும், நாடகக் கலைஞர்களுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த சார்லி சாப்ளின்தான் அந்தக் குழந்தை. அழியாப் புகழ்கொண்ட அக்கலைஞனின் எத்தனை முறை கொண்டாடினாலும் திகட்டாது!

123_15304  "வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!" - 123 15304

ஒருநாள் காலை, மக்கள் ஆரவாரத்துடன் தங்களது பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். அப்போது கசாப்புக் கடையை நோக்கி, தெருவுக்குள் நுழைந்தது ஒரு வண்டி.

அதில், இருந்து பல ஆடுகள் வரிசையாக வந்து இறங்கின. கடைசியாக இறங்கிய ஆடு மட்டும் சாமர்த்தியமாக கசாப்புக் கடைக்காரனிடம் இருந்து தப்பித்து தெறித்தோடியது.

சந்துபொந்துகளில் துள்ளிக் குதித்து ஓடும் அந்த ஆட்டைப் பிடிக்கும் முயற்சியில் அங்குமிங்கும் தடுமாறி விழுகிறார் கசாப்புக் கடைகாரர். அங்கு நடக்கும் இந்த நிகழ்வைப் பார்த்த மக்கள், வயிறு குலுங்கிச் சிரித்து மகிழ்ந்தனர்.

மக்களோடு மக்களாக சாப்ளினும் அந்நிகழ்வைக் கண்டு சிரித்து மகிழ்கிறார். ஒருவழியாக தப்பித்த ஆடு கசாப்புக் கடைக்காரனிடம் சிக்கியது. மக்களும் அவரவர் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினர்.

வேடிக்கை பார்த்த சாப்ளின் மட்டும் கசாப்புக் கடைக்காரனைப் பின் தொடர்கிறார். கசாப்புக் கடையில் நிகழ்ந்ததைப் பார்த்த சாப்ளின், பதறிப்போனார். இது ஒரு நிகழ்வு.

சாப்ளின், அவரது அம்மாவின் எல்லா நாடகங்களிலும் கலந்துகொள்வது வழக்கம். அப்படியொரு நாள் அவரது அம்மா நாடகத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே பேசும் திறனை இழந்தார்.

இவர் பேச முயற்சி செய்து, திக்குவதைப் பார்த்து பார்வையாளர்கள் அனைவரும் கேலி, கிண்டல் செய்து சிரித்துக்கொண்டிருந்தனர், இருவரைத் தவிர!. பேசும் திறனை இழந்த ஹன்னா, அவர் படும் வேதனைகளைப் பார்த்து அழத்தொடங்கிய சாப்ளின்தான் அந்த இருவர். பின், `அழுதால் மட்டுமே இந்த உலகில் வாழமுடியாது’ என்று நினைத்தாரோ என்னவோ… தாயை ஓய்வெடுக்கும்படி ஓரமாக அமர்த்திவிட்டு, மேடையில் இவர் பாடத் தொடங்கினார்.

`சிறுவன் ஏதோ முயற்சி செய்கிறான்’ என்று அதைக் கண்டுகழித்த பார்வையாளர்கள் அனைவரும் சில்லறைகளை அள்ளிவீசத் தொடங்கினர். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நாடகத்தின் மேலாளர், சிறுவனுக்கு உதவ எண்ணி சில்லறைகளைப் பொறுக்கத் தொடங்கினார்.

அவர் திருட முயற்சிக்கிறார் என்று எண்ணிப் பாடிக்கொண்டே அவரிடம் சென்று கையில் இருந்த காசை முறைத்தபடி பிடுங்கினார். இதைப் பார்த்ததும் அங்கிருக்கும் அனைவரும் வயிறு குலுங்க சிரிக்கத் தொடங்கினர்.

charlie_chaplin_caricature_by_bluefootednewt-d30v4y8_15345  "வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!" - charlie chaplin caricature by bluefootednewt d30v4y8 15345

அந்தச்சமயத்தில் சாப்ளினின் மனநிலை என்னவாக இருந்திருக்கும்?! தன் முதல் மேடையே வெற்றிகரமாக மாறியதை எண்ணி சந்தோஷத்தில் துள்ளிக்குதிப்பதா, தனது அம்மாவிற்கு அதுதான் கடைசி மேடை என்று எண்ணிக் குமுறி அழுவதா? இந்தக் கேள்விக்கான பதில்தான் இன்று, இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் சாப்ளின் கற்றுக்கொண்ட பாடம் ஒன்றுதான். `சிரித்தால், ஒட்டுமொத்த உலகமுமே உன்னுடன் சேர்ந்து சிரிக்கும்.

அழுதால், கடைசிவரை நீ மட்டும்தான் அழவேண்டும்’ என்ற தத்துவத்தை தனது சிறு வயதிலே புரிந்துகொண்டார், சாப்ளின். தன் உலகில் நடக்கும் நிகழ்வுகளோடு, வெளியுலகத்தில் நடக்கும் அவலங்களையும் சாப்ளின் அமைதியாக கவனத்துக்கொண்டே இருந்தார். முதலாளி வர்க்கத்தையும், தொழிலாளிகளின் அவலங்களையும் தன் படங்களில் காட்டத் தொடங்கினார்.

சார்லி சாப்ளினிடம் `Are you a communist or Socialist?’ என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, `I’m just a peace monger’ என்று சிம்பிளாக பதிலளித்தார் சாப்ளின். `Peace monger’ என்றால், அமைதிகளின் வியாபாரி.

`என் வழியில், நான் அமைதியை மக்களிடம் விற்பேன்’ என்பதே அவர் சொன்ன பதில். காரல் மார்க்ஸின் `மார்க்சிஸ’த்தான் தன் `மாடர்ன் டைம்ஸ்’ படத்தில் பயன்படுத்தியிருப்பார், சாப்ளின். ஆட்டு மந்தைகளுக்கு மத்தியில் ஒரு கறுப்பு ஆடு சென்றுகொண்டிருக்கும். அது, சாப்ளின்தான்.

இதிலிருந்துதான், படம் தொடங்கும். அதற்கடுத்த காட்சியில் தொழிலாளிகள் கூட்டமாக வேலைக்குச் சென்றுகொண்டிருப்பார்கள். `தொழிலாளிகள் அனைவரும் ஆட்டு மந்தையில் இருக்கும் ஆடுகளுக்குச் சமம், அதில் ஒரு கறுப்பு ஆடாக இருந்து தொழிலாளிகளின் அவலத்தை அரங்கேற்றுவேன்’ என்ற விதத்தில் இடம்பெற்றிருக்கும் அவரது காட்சி மொழி.

`மனுஷன் அந்தக் காலத்திலேயே எப்படி யோசிச்சுருக்கார் பாரேன்!’ என்ற வியப்பை ஏற்படுத்துகிறது. அதில் இடம்பெற்றிருக்கும் ஒவ்வொரு காட்சியும், தொழிலாளி வர்க்கத்திற்குக் குரல் கொடுப்பதுபோல் அமைந்திருக்கும்.

Dictator_charlie3_15277  "வலியைப் புன்னகையாக்கி, சந்தோஷத்தை விற்ற அரை இன்ச் மீசைக்காரன்!" - Dictator charlie3 15277

இவரின் மற்றொரு மகத்தான படைப்பு, `தி டிக்டேட்டர்’. மூக்கிற்குக் கீழே அரை இன்ச் மீசை வைத்திருப்பவர்களில் மூன்று பேர் நமக்குப் பரீட்சயம். ஹிட்லர், சாப்ளின் மற்றும் நம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்.

ஒருமுறை பாரதிதாசனின் நண்பர், `என்னங்க, ஹிட்லர் மாதிரி மீசை வெச்சுருக்கீங்க?’ எனக் கேட்டதற்கு, `ஹிட்லரே சார்லி சாப்ளின் ரசிகன்தான்யா,

இது ஹிட்லர் மீசை இல்லை, சார்லி சாப்ளின் மீசை!’ என்று பதில் கூறினாராம். இரண்டாம் உலகப்போர் சமயத்தில், ஹிட்லர் உலகையே தன் அடிமையாக்கும் நோக்கோடு சர்வாதிகாரியாக செயல்பட்டுக்கொண்டிருந்தார்.

இதைத் தன்னுடைய ‘தி டிக்டேட்டர்’ படத்தின் மூலம் அரங்கேற்றினார் சாப்ளின். `உலகம் ஒரு சர்வாதிகாரியின் பிடியில் சிக்கினால் மக்களின் நிலை என்ன?’ என்பதை எடுத்துரைப்பதே இந்தப் படத்தின் நோக்கம். உலகமே அந்த மனிதனைக் கண்டு அஞ்சி நடங்கும் சமயத்தில், அப்படியொரு படைப்பைக் கொடுத்ததுதான் சாப்ளினின் சரியலிஸம்.

உலகில், கடைசி மனிதனின் முகத்தில் சிரிப்பு இருக்கும் வரை, அதில் சாப்ளின் உயிர் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். தனது வலிகளைப் புன்னகையாக மாற்றி, சந்தோஷத்தை மட்டுமே நமக்கு விற்ற, இந்த அரை இன்ச் மீசைக்காரனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!