சிரியா அரசு, இரசாயன தாக்குதலை மீண்டும் நடத்தினால் அந்த நாட்டின் மீதான ராணுவ தாக்குதல் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் நிக்கி ஹேலி இதனை தெரிவித்துள்ளார். உள்நாட்டுப் போர் நிகழ்ந்து வரும் சிரியாவில் அந்நாட்டு அரசுப் படையினர் கடந்த 7ம் திகதி இரசாயன ஆயுதங்கள் மூலம் தாக்குதல் நடத்தினர்.
இதில் குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
ஆனால், இரசாயனத் தாக்குதலை நடத்தவில்லை என சிரியாவும், அந்நாட்டுககு ஆதரவாக செயல்பட்டு வரும் ரஷ்யாவும் திட்டவட்டமாக மறுத்தன. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ட்ரம்ப் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், சிரியா இராணுவ நிலைகள் மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படை சனிக்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
சிரியா ஜனாதிபதி பஷார் அல் அஸாத்தின் ஆட்சிக்கு எதிராகவும், அவரது படைகளிடம் உள்ள இரசாயன ஆயுதங்களை அழிக்கும் வகையிலும் இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக விளக்கம் தரப்பட்டது.
சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹாம்ஸ் நகரங்களிலுள்ள இரசாயன ஆயுதங்களைத் தயாரிப்பதற்கு உதவக் கூடிய ஆய்வு மையம், அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்கக் கூடிய கிடங்குகள் மற்றும் கட்டுப்பாட்டு மையத்தைக் குறிவைத்து அமெரிக்க கூட்டுப் படைகள் தாக்குதலை மேற்கொண்டன.
இந்த தாக்குதலுக்கு ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளன. அத்துடன், இந்த தாக்குதல் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அதில், அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு எதிராக ரஷ்யா கண்டன தீர்மானம் கொண்டு வந்தது. 15 உறுப்பினர்கள் கொண்ட சபையில் சீனா, பொலிவியா ஆகிய நாடுகள் மட்டும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.
அதே சமயம், அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்வீடன், குவைத், போலந்து, ஐவரிகோஸ்ட் உள்பட 8 நாடுகள் அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன.
எத்தியோப்பியா, கஜகஸ்தான், கினியா, பெரு ஆகிய நாடுகள் கண்டன தீர்மான வாக்கெடுப்பை புறக்கணித்தன. இதையடுத்து, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் தோல்வியடைந்தது.
இந்த தீர்மானத்தின் போது, ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதுவர் நிக்கி ஹேலி கருத்து தெரிவிக்கையில்,
குழந்தைகள், பெண்கள் மீது சிரியா அரசுத் தரப்பு நடத்திய இரசாயன தாக்குதலையும், அத்துமீறலையும் தடுக்கும் வகையில்தான் அவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு தெளிவான செய்தி சொல்லப்பட்டுள்ளது.
அவர்கள் மீண்டும் இரசாயன தாக்குதலை நடத்தலாம். இது சம்பந்தமாக ஜனாதிபதி டிரம்ப் என்னிடம் பேசினார். அப்போது, இனிமேலும் சிரியா இரசாயன தாக்குதல்களில் ஈடுபட்டால் அந்த நாட்டின் மீதான இராணுவ தாக்குதல் தொடரும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக அமெரிக்கா ஆயுதங்களை தயார் நிலையில் வைத்துள்ளது என்றும் அவர் தன்னிடம் தெரிவித்ததாக நிக்கி ஹேலி மேலும் தெரிவித்துள்ளார்.