இரட்டை இலைச் சின்னம் வழக்கை ஏப்ரல் 30-ம் தேதியோடு முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த வழக்கு விசாரணை இன்று (17-ம் தேதி) தொடங்குகிறது. எனவே, இந்த வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளது.
அப்போலோ மருத்துவமனையில் தங்கி, 75 நாள்கள் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் சிகிச்சைப் பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவி ஏற்றார். அதன்பின், நடந்த கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளராக வி.கே.சசிகலா ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டார். அவரை, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்தான் முன்மொழிந்தார். “இந்தத் தேர்வு செல்லாது” என்று அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவையைச் சேர்ந்த கே.சி.பழனிசாமி, டெல்லியில் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார். அதில், “கட்சியின் சட்டத்திட்ட விதிகளின்படி, பொதுச்செயலாளரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள்தான் தேர்வுசெய்ய வேண்டும். எனவே, சசிகலா நியமனம் செல்லாது” என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில், சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று அ.தி.மு.க-வில் நடந்த திரைமறைவு வேலைகளில் நொந்துபோன ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அமைய இருக்கும் புதிய அமைச்சரவையில் தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பதை அறிந்து அதிர்ந்துபோன அவர், சசிகலா குடும்பத்துக்கு எதிராகத் தர்ம யுத்தம் தொடங்கினார். இந்த நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் 4 வருட ஜெயில் தண்டனையை சசிகலாவுக்கு உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, அவர் சிறைக்குப் போகும் முன், எடப்பாடி பழனிசாமியை முதல்வராகவும் டி.டி.வி.தினகரனை கட்சியின் துணைப் பொதுச்செயலாளராகவும் நியமித்தார்.
“அ.தி.மு.க பொதுச்செயலாளராகச் சசிகலா நியமனம் செய்யப்பட்டது செல்லாது” என்று ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தல் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தது. அப்போது, சசிகலாவுக்கு ஆதரவாக எடப்பாடி பழனிசாமி அணியினர், “பொதுச்செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரன் நியமிக்கப்பட்டது செல்லும்” என்று தேர்தல் ஆணையத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி.தினகரனுக்காக வேலை செய்த மூத்த அமைச்சர்கள் டீம் ரூ.89 கோடி பட்டுவாடா புகாரில் வருமானவரித் துறை சோதனையில் சிக்கியது. அதோடு, டி.டி.வி.தினகரனை கைகழுவினார் எடப்பாடி பழனிசாமி. அதன்பிறகு, ஓ.பன்னீர்செல்வம் -எடப்பாடி பழனிசாமி அணிகள் ஒன்றுசேரும் வேலைகள் தொடங்கின. தமிழக அமைச்சர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, டி.டி.வி.தினகரனைக் கட்சியில் இருந்து நீக்கித் தீர்மானம் போட்டனர். கடந்த ஆகஸ்ட் மாதம், இரு அணிகளும் இணைந்தன. அதன் பின்னர் நடந்த பொதுக்குழுவில் சசிகலாவை நீக்கிவிட்டு, ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், தேர்தல் ஆணையத்தில் நடந்த வழக்கு விசாரணைகளில் எடப்பாடி பழனிசாமி தரப்பு, ஏற்கெனவே ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக மனுத் தாக்கல் செய்திருந்தாலும் அவர்கள், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டனர். இந்த நிலையில், இரட்டை இலைச் சின்னத்தை முடக்கிவைத்திருந்த தேர்தல் ஆணையம், “கட்சியும், தேர்தல் சின்னமும் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி அணிக்குத்தான்” என்று தீர்ப்பளித்தது. கடந்த நவம்பர் 23-ம் தேதி இந்தத் தீர்ப்பு வெளியானது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் டி.டி.வி.தினகரன் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த வழக்கில் கே.சி.பழனிசாமியும் தன்னை இணைத்துக்கொண்டார். வழக்கு விசாரணையின்போது, டி.டி.வி.தினகரன், “அ.தி.மு.க. மெயின் வழக்கு முடியும் வரை தான் தொடங்க இருக்கும் புதிய அமைப்புக்கு குக்கர் சின்னம் வேண்டும்” என்று கோரிக்கைவைத்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்றம், “இன்னும் மூன்று வாரங்களுக்குள் குக்கர் சின்னத்தை டி.டி.வி.தினகரனுக்கு ஒதுக்க வேண்டும்” என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவைத்தலைவர் மதுசூதனன் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரித்தது. “டி.டி.வி.தினகனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க டெல்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடைவிதிக்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தையும் அ.தி.மு.க கட்சியையும் ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு விசாரித்து மூன்று வாரத்துக்குள் தீர்ப்பளிக்க வேண்டும்” என்று அந்த அமர்வு உத்தரவிட்டது. அந்தக் கெடு, ஏப்ரல் 30-ம் தேதியோடு முடிகிறது. அந்த வழக்கின் விசாரணை டெல்லியில் இன்று (17.4.18) மீண்டும் தொடங்குகிறது.
இந்த நிலையில், மீண்டும் சூடுபிடித்துள்ள இரட்டை இலை வழக்கு குறித்து கே.சி.பழனிசாமியிடம் (இவர் தற்போது அ.தி.மு.க.-விலிருந்து நீக்கப்பட்டுள்ளார்) பேசினோம். “சசிகலா நியமனத்தை எதிர்த்து முதன்முதலில் நான்தான் வழக்குப் போட்டேன். எம்.ஜி.ஆர். கொண்டுவந்த அ.தி.மு.க சட்டவிதிகளை ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிசாமியும் மாற்றியுள்ளனர். கட்சியில் உள்ள உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும், பொதுச் செயலாளர் பதவியை ரத்துசெய்துவிட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகளைக் கொண்டுவந்துள்ளனர். எம்.ஜி.ஆர். வகுத்த கட்சி விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வில் எந்தக் காலத்திலும் மாற்றம் கொண்டுவரக் கூடாது என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்.
அதையே ஜெயலலிதாவும் உறுதிபடுத்தியிருக்கிறார். அதற்கு மாறாக, கட்சி அடிப்படை விதிகளையே மாற்றிப் புதிதாக பதவிகளைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த இரண்டு பதவிகளையும் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை. இத்தகவல், தேர்தல் ஆணையம் கொடுத்த ஆர்.டி.ஐ தகவல் மூலம் உறுதியாகியுள்ளது. அப்படியென்றால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோருக்கு என்னைக் கட்சியிலிருந்து நீக்க அதிகாரம் இல்லை. அது ஒருபுறம் இருக்க, அ.தி.மு.க-வில் பொதுச் செயலாளர் பதவி வேண்டும்; அதற்குத் தேர்தல் நடத்த வேண்டும். அதை நீதிமன்றத்தில் சொல்வேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் நின்று அ.தி.மு.க-வைக் காப்பாற்றுவேன்” என்றார்.
இரட்டை இலைச் சின்னமும், அ.தி.மு.க-வும் யாருக்கு என்பது வரும் 30-ம் தேதி தெரிந்துவிடும்.