வாடகைக்கு குடியிருந்து வருபவர் தனது வீட்டை அபகரிக்க முயல்வதால் மனம் வெறுத்த மூதாட்டி ஒருவர் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீரென தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்றார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த முத்துச்சாமியின் மனைவி பாண்டியம்மாள் (70). இவரின் 5 மகள்களும் திருமணம் செய்து கொடுத்து வெளியூரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாகக் காளைச்சாமி என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். காளைச்சாமி அவரின் மனைவி இந்திராணி மற்றும் உறவினர்கள் வேணி, ராஜேஸ்வரி ஆகியோர் ஒன்று சேர்ந்துகொண்டு தனது வீட்டை அபகரிக்கப் போவதாக மிரட்டுவதாகவும் பாண்டியம்மாளை வீட்டை காலி செய்து போகுமாறும் இல்லையேல் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி வருகின்றனராம். அடிக்கடி அரிவாளை எடுத்து வந்து வெட்டிக் கொலை செய்து விடுவேன் எனக் கூறி மிரட்டியுள்ளதாகவும் இது குறித்து பரமக்குடி காவல்நிலையத்தில் புகார் செய்தும் எந்த நடவடிக்கை ஏதும் இல்லை என மூதாட்டி கூறியுள்ளார்.
இந்நிலையில் வாடகைக்கு வீட்டில் குடியிருப்பவர்களே தனது சொத்தை அபகரிக்கப்போவதால் மனம் வெறுத்த மூதாட்டி பாண்டியம்மாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு மனு அளிக்க வந்தார். அப்போது திடீரென தான் வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்து மூதாட்டி தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடனடியாக அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் பாண்டியராஜ் தண்ணீரை அவரின் உடலின் மேல் ஊற்றி அவரைக் காப்பாற்றினார். இதை அறிந்து அங்கு வந்த காவல்துறையினர் மூதாட்டி பாண்டியம்மாளை கேணிக்கரை காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.