ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான பதவிகள் 19 ஆம் திகதி நிரப்பப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கட்சியின் மறுசீரமைப்பு குழு கூடவுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்ட அரசியல் சபை 11ஆம் திகதி அலரி மாளிகையில் முதன்முதலாக கூடியது. இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.
நாளை கூடவுள்ள மறுசீரமைப்பு குழு கூட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பதவிகள் யாருக்கு செல்லப்போகின்றது பற்றி சில தகவல்கள் கசிந்துள்ளன.
கட்சியின் தவிசாளராக இருந்த அமைச்சர் மலிக் சமரவிக்ரமவும், பொதுச் செயலாளராக இருந்த அமைச்சர் கபீர் ஹாசிமும், பொருளாளராக இருந்த எரான் விக்ரமரட்னவும் அண்மையில் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்தார்கள்.
இதன்படி ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய முக்கிய பதவிகளே நிரப்பப்பட உள்ளன.
மேலும், கட்சியின் பொதுச் செயலாளர் பதவியின் அதிகாரங்களை ஊடக செயலாளர், பிரச்சார செயலாளர் மற்றும் தொழிற்சங்க செயலாளர் என மூன்றாக பகிர்ந்து பதவிகளை உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், செயலாளர் பதவிகளுக்கு மூவரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
அகில விராஜ்காரியவசம், இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோரின் பெயர்களே பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாளை இது குறித்து தீர்க்கமான முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.