மைத்திரிக்கு லண்டனில் கிடைத்த மகிழ்ச்சியான செய்தி!

இலங்கைக்கு வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து, இலங்கையில் பல நேரடி முதலீடுகளை மேற்கொள்ள பிரித்தானியா அரசாங்கம் தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கான நடவடிக்கைகளை எதிர்காலத்தில் மேற்கொள்வதாகவும் சர்வதேச வர்த்தக விவகாரங்களுக்கான பிரித்தானிய இராஜாங்க செயலாளர் லியாம் பொக்ஸ் (Liam Fox) தெரிவித்தார்.

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை இன்று (18) பிற்பகல் லண்டன் நகரின் சந்தித்த லியம் பொக்ஸ் இதனை குறிப்பிட்டார்.

இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்தி புதிய வர்த்தக மற்றும் முதலீட்டு வாய்ப்புக்களை விரிவுபடுத்துதல் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த லியம் பொக்ஸ், “இலங்கையில் காணப்படும் புதிய முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பிரித்தானிய சர்வதேச வர்த்தக அலுவல்கள் அமைச்சின் இணையத்தளத்திலும் உள்ளடக்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக” தெரிவித்தார்.

இதனிடையே இலங்கையுடன் நெருக்கமாக செயற்படும் பிரித்தானிய பழமைவாதக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரித்தானிய பிரபுக்கள் சபையின் உறுப்பினருமான பரோன் நெஸ்பி (Baron Naseby) லண்டன் நகரில் ஜனாதிபதி அவர்களை சந்தித்தார்.

இலங்கை அரசாங்கத்தினால் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் அபிவிருத்தி செயற்திட்டங்களை பாராட்டிய பரோன் நெஸ்பி, இலங்கையின் உண்மையான ஆதரவாளர் என்ற வகையில் அதற்கான ஒத்துழைப்புக்களையும் பெற்றுத்தருவதாக குறிப்பிட்டார்.

அத்துடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டுவரும் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க செயற்திட்டங்களையும் பாராட்டிய பரோன் நெஸ்பி, யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் செயற்பணிகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறந்த மட்டத்தில் காணப்படுவதாக தெரிவித்தார்.

இத்தகைய செயற்பாடுகள் பற்றிய சரியான, போதிய தகவல்கள் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெனிவாவுக்கும் உரியவாறு கிடைக்கப்பெறாமை வருந்தத்தக்கதாகும் என தெரிவித்த பரோன் நெஸ்பி, அந்த உண்மை நிலை தொடர்பாக அவர்களை தெளிவுபடுத்த தாம் தமது பூரண உதவியை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் உண்மையான நிலைமை தொடர்பாக போதிய புரிந்துணர்வுடன் நாட்டின் அபிவிருத்தி மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளுக்காக பரோன் நெஸ்பி வழங்கும் தனிப்பட்ட உதவிகளுக்கும் இதன்போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.