வடக்கின் அடுத்த முதல்வர் யார்?” -கருணாகரன்

வடக்கின் அடுத்த முதல்வர்? விக்கினேஸ்வரனா? மாவை சேனாதிராஜாவா? இருவருக்குமிடையில் ஆறு வித்தியாசங்கள் வேண்டாம், ஒரேயொரு வித்தியாசம் இருந்தாலே போதும். அதைக் கண்டு பிடியுங்கள், பார்க்கலாம் என்று இரண்டு நாட்களாக ஒரு நண்பர் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார்.

நான் என்ன செய்ய முடியும்? இரண்டு நாட்களாக நானும் முயற்சித்துப் பார்த்து விட்டேன். அந்த ஒரு வித்தியாசத்தையே கண்டு பிடிக்க முடியவில்லை என்னால்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிந்து, களைப்புத் தீரவில்லை. அதற்கிடையில் “வடக்கின் அடுத்த முதல்வர் யார்?” என்ற ஆராய்ச்சியிலும் அறிவிப்பிலும் இறங்கி விட்டன யாழ்ப்பாணத்துப் பத்திரிகைகள்.

இதற்குத் தீனி போட்டிருப்பது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே. இதற்குக் காரணம் தேர்தல் என்பது இவற்றுக்கெல்லாம் இனிப்புப் பண்டமாகி விட்டது.

அதாவது லாபம் கொழிக்கின்ற சங்கதி. மக்களுக்கு தாம் என்ன செய்கிறோம்? அரசியலில் எத்தகைய முன்னேற்றங்களை எட்டுகிறோம்? சமூகத்தில் என்ன வகையான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறோம் என்றெல்லாம் இந்தத் தரப்புகள் சிந்திப்பதில்லை.

இதையிட்ட கேள்விகளை மக்களும் கேட்பதில்லை. எனவே “கனவான்கள்” சனங்களின் காதில் சுலபமாகப் பூவைச் சூடுகிறார்கள். வாயில் வாழைப்பழத்தை தோலுடனே தீத்துகிறார்கள்.

அப்படியான ஒரு வாழைப்பழம்தான், வடக்கின் அடுத்த முதலமைச்சர் யார்? அதற்கான வேட்பாளராக யார் போட்டியிடுவார்? என்ற புருடா.

கடந்த வாரம் கூட்டமைப்பின் முக்கியஸ்தர் ஆபிரகாம் சுமந்திரன், வடக்கின் அடுத்த முதலமைச்சர் பற்றிய அறிவிப்பை விடுத்திருந்தார். அதில் மாவை சேனாதிராஜாவின் பெயரை முதலமைச்சர் வேட்பாளராக கூட்டமைப்பு அறிவிக்கும் என்று தெரிவித்திருந்தார்.

இது உத்தியோகபூர்வமான அறிவிப்பு இல்லை என்றாலும் இந்த அறிவிப்போடு அரசியல்களம் சூடாகியது. “மாவைக்குத் தகுதி கிடையாது” என்று ஒரு தரப்பு சொன்னது.

vikneswaran_4 வடக்கின் அடுத்த முதல்வர் யார்?” -கருணாகரன் வடக்கின் அடுத்த முதல்வர் யார்?” -கருணாகரன் vikneswaran 4“விக்கினேஸ்வரனே மறுபடியும் முதல்வராக வேணும்” என்றது இன்னொரு தரப்பு. “இவை இரண்டினாலும் பயனில்லை. முதல்வராக வருவதாக இருந்தால், அதற்குத் தகுதியானவர் சுமந்திரனே” என்றது இடையில் இன்னொரு தரப்பு.

இவர்களை விட வரதராஜப்பெருமாளே சிறப்பு என்றது வேறொரு தரப்பு. இவை ஒன்றுமே வேண்டாம். புதிதாக ஒரு முகத்தை – ஒரு தரப்பை தெரிவு செய்வதே பொருத்தமானது என்றது மற்றொரு தரப்பு.

இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு அபிப்பிராயம் சொல்லத் தொடங்கினார்கள்.

இந்தச் சூழலில் விக்கினேஸ்வரன் சுமந்திரனுக்குப் பதிலளிப்பது போல – பதிலடியாக – அதிரடி அறிவிப்பொன்றை விடுத்தார். கடவுளும் மக்களும் விரும்பினால், அடுத்த முதலமைச்சராகப் போட்டியிடுவேன்” என.

இதனையடுத்து பரபரப்பானது சூழல். ஏற்கனவே விடுத்திருந்த அறிவிப்பை வாபஸ் வாங்கினார் சுமந்திரன். மாவை வாயே திறக்கவில்லை. ஆனால், கள நிலவரத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

உண்மையில் சுமந்திரனின் அறிவிப்பு திட்டமிட்டதொரு ஒத்திகை நடவடிக்கையே. களநிலவரம் எப்படியிருக்கிறது என்பதை ஒத்திகை பார்ப்பதற்கான – நாடிபிடித்துப் பார்ப்பதற்கான முன்னோட்டம். இதில் சுமந்திரன் ஒரு அறிவிப்பின் மூலம் தனக்குரிய பல பதில்களை எதிர்பார்க்க முனைந்தார்.

முதலாவது, விக்கினேஸ்வரன் எத்தகைய நிலைப்பாட்டுடன் இருக்கிறார்? அடுத்த தடவை போட்டியிடுவாரா? அப்படியானால் எந்தத் தரப்பின் சார்பில் போட்டியிடுவார்? என்பது.

இரண்டாவது, மாவையின் பெயரை அறிவித்து, அவருக்குள்ள செல்வாக்கு மண்டலத்தின் தாற்பரியத்தை உணர்த்தி, அவரைப் போட்டியிலிருந்து – களத்திலிருந்து – அப்புறப்படுத்துவது.

மூன்றாவது, மாவைக்கோ விக்கினேஸ்வரனுக்கோ ஆதரவாகவும் எதிராகவும் திரள்வோரை அடையாளம் காண்பது.

நான்காவது, எல்லாவற்றுக்கும் அப்பால் இறுதி நேரத்தில் தானே களத்தில் குதிப்பதற்கான தள நிலையைக் கண்டறிவதும் அதற்கான தயாரிப்புகளில் ஈடுபடுவதும்.

இதோ இந்தப் பத்தியாளரே மாவையையும் விக்கினேஸ்வரனையும் விடச் சுமந்திரன் பரவாயில்லை என்றே பரிந்துரை செய்யும் நிலையே இந்தச் சூழலில் உள்ளது.

அதற்கான தர்க்கமும் உண்டு. ஆனால், சுமந்திரனின் அரசியலையோ அவருடைய அணுகுமுறைகளையே இந்தப் பத்தியாளர் முன்மொழியவில்லை. இது தொடர்பான விவாதத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் விரிவாக நோக்கலாம்.

என்றாலும் சமூக மட்டத்தில் இந்த விவகாரமும் விவாதங்களும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

தற்போதைய சூழலின்படி விக்கினேஸ்வரன் எப்படியும் தேர்தலில் குதிப்பார் என்று நம்பலாம். அதற்கான ஆதாரங்கள் தாரளமாகவே உண்டு. “கடவுளும் மக்களும் விரும்பினால் தான் மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடுவேன்” என்று கடவுளையும் மக்களையும் சாட்டுக்கு அழைத்துச் சொன்னது வேறு எதற்கும் அல்ல. நிச்சயமாகப் போட்டியிடுவேன் என்ற அறிவிப்புக்காகவே.

இதில் தெரியாத பக்கமாக இருப்பது முதலமைச்சருக்காகப் போட்டியிடும் விக்கினேஸ்வரன் எந்தத் தரப்பின் வேட்பாளராகக் களமிறங்குவார் என்பது மட்டுமே. ஆனால், “எந்தச் சந்தர்ப்பத்திலும் கூட்டமைப்பை உடைத்தேன் என்ற பழிக்கு இடம் கொடுக்க மாட்டேன்” என்று இதற்கும் மெல்லியதொரு பதிலைக் கோடிட்டுக் காட்டியிருக்கிறார் விக்கினேஸ்வரன்.

அப்படியென்றால், கூட்டமைப்பின் சார்பாகவே விக்கினேஸ்வரன் போட்டியிடக் கூடும். அதற்கான வாய்ப்பை கூட்டமைப்பு – சுமந்திரன் – கொடுக்காது விட்டால், தனக்குரிய வாய்ப்பைத் தடுத்தது கூட்டமைப்பு என்ற குற்றச்சாட்டோடு விக்கினேஸ்வரன் புதிய அணியில் நுழைவார். அது அவருக்கான அனுதாப அலையை உண்டாக்கும். ஆகவே இரண்டு நிலையிலும் விக்கினேஸ்வரன் பலமாகவே உள்ளார்.

ஆகவே உண்மையில் விக்கினேஸ்வரன் “செக்” வைத்திருப்பது சுமந்திரனுக்கே. ஆனால், விக்கினேஸ்வரனுக்குச் “செக்” வைக்க முயற்சிக்க முயற்சித்தது சுமந்திரனே. அதை மாற்றிப் போட்டிருக்கிறார் விக்கினேஸ்வரன்.

இதெல்லாம் கூட்டமைப்புக்குள்ளே நடக்கிற உள்மோதல்களும் போட்டிகளும். இதன் விளைவுகள் எப்படி அமையும் என்பதை இன்னும் சில நாட்கள் அவதானிப்பில் கண்டுணர முடியும்.

இதற்கு வெளியே தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி (தமிழ்த்தேசியப் பேரவை) ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி போன்றவையும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும். அப்படிப் போட்டியிட்டால், அவையும் முதன்மை வேட்பாளரை அறிவிக்கும். ஆகவே முதலமைச்சருக்கான வேட்பாளர்கள் பலருண்டு.

வெற்றி தோல்வி என்பது வேறு. களமாடுவது வேறு. மாகாணசபையில் களமாடுவதற்குரிய ஆட்கள் தாரளமாக இருக்கிறார்கள். தேர்தல் இனிப்பை எல்லோருக்கும் சுவைத்துப் பார்க்க விருப்பம். ஆகவே பலமுனைப் போட்டி நிச்சயமாக இருக்கும்.

எப்படியான போட்டியாக இருந்தாலும் தெரிவு என்றால் ஒருவரே முதலமைச்சராக வர முடியும். தட்டித்தவறி சுமந்திரன் முதலமைச்சராக வந்தால், அதனுடைய நேரடிப் பாதிப்பு அல்லது உச்சப்பாதிப்பு ஈ.பி.டி.பிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குமே நேரும். தேவானந்தாவின் அரசியல் இருப்பையும் அடையாளத்தையும் சுமந்திரன் நெருக்கடிக்குள்ளாக்குவார்.

மறுவளத்தில் சுமந்திரன் தெரிவு செய்யப்பட்டால் கூட்டமைப்புக்கு பெரியதொரு கொடையாக அமையும். கஜேந்திரகுமாருக்கும் சுமந்திரனுக்கும் வெளிப்படையாள முரண்களும் விலகல்களும் இருந்தாலும் அரசியல் செயற்பாட்டு முறைமையில் அவர்கள் ஒன்றே.

ஆனால், சேனாதிராஜாவோ விக்கினேஸ்வரனோ முதல்வரானால் அதனுடைய அரசியல் அறுவடை ஈ.பி.டி.பிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குமே கிடைக்கும். முதியவர்கள் தமது மாறாக்கொள்கையின்படி செயற்படும்போது, அதனால் உண்டாகும் அதிருப்தியும் தளம்பலும் டக்ளஸைப் பலப்படுத்தும்.

ஆனால், அரசியல் கட்சிகளின் தொடர்பு எல்லைக்கு அப்பால் நல்ல – ஆளுமையும் மக்கள் மீதான கரிசனையும் உள்ள தலைவர்கள் பலர் உள்ளனர். இந்த மாதிரி பிரபலங்களுக்குள் தலைவர்களையும் முதல்வர்களையும் தேடிக் கொண்டிருக்காமல், தெரிவுகளைச் செய்ய முயற்சிக்காமல் புதிய முகங்களை – புதிய களத்தில் தேட வேணும். அரசியல் வெற்றியைப் பெறுவதற்கு அதற்கான தகுதியுடையவர்களே தேவை.

ஆனால், அப்படி இனங்காணக்கூடியவர்களை மக்களும் நம்புவதில்லை ஊடகங்களும் நம்புவதில்லை. இதனால் புதிய தரப்புகளைப் பற்றி யாருமே பொருட்படுத்துவதில்லை. எனவே “பழைய மொந்தையில் புதிய கள்ளு” என்ற மாதிரியாகவே கள நிலவரம் உள்ளது.

துயரந்தருகின்ற அளவுக்கு தமிழ்த்தேசியவாத அரசியலானது, பிரபலங்கள், பிரமுகர்கள் என்ற அடிப்படையிலேயே தன்னுடைய போட்டியாளர்களை உருவாக்குகிறது. இதில் தகுதி என்று எதுவும் பார்க்கப்படுவதில்லை. தோற்கடிக்கப்பட்டவர்களிடம் இருக்கின்ற அளவுக்கு வெற்றியடைந்தவர்களிடம் மக்கள் மீதான கரிசனையும் சமூக அக்கறையும் இல்லை.

எனவே எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே வழித்தடத்தில் தள்ளாடித் தள்ளாடி நகரப்போகிறது தமிழ் அரசியல் வண்டி. இது எப்போது உரிய இடத்துக்குப் போய்ச் சேரப்போகிறது.

(கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்று ஏன் யாருமே அக்கறைப் படுவதில்லை என்ற கேள்வியை மட்டும் தயவு செய்து கேட்டு விடாதீர்கள்?

-கருணாகரன்-