மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விருதுநகர்:மாணவிகளை தவறான வழிக்கு கொண்டு செல்ல முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி விடிய விடிய நடந்த போலீஸ் விசாரணையில் சில முக்கிய தகவல்களை வெளியி ட்டுள்ளார்.
அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி அதே கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை பாலியலுக்கு அழைத்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக நிர்மலா தேவி மாணவி ஒருவரிடம் பேசிய ஆடியோ வாட்ஸ்- அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் நேற்று முன்தினம் வெளியானது. சுமார் 19 நிமிடங்கள் மாணவிகளுடன் செல்போனில் பேசும் நிர்மலா தேவி, உங்களுக்கு மதிப்பெண் குறையாமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.
அதற்கு நீங்கள் மதுரை காமராஜர் பல்கலை கழக உயர் அதிகாரிகளின் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். இதற்கு மாணவிகள் மறுப்பு தெரிவித்த போதிலும் திரும்ப திரும்ப அவர்களை கட்டாயப்படுத்தி சம்மதிக்க வைப்பதிலேயே குறியாக இருப்பது அவரது பேச்சில் தெரிகிறது.
கல்வியை கற்றுக் கொடுக்கும் குருவாக விளங்க வேண்டிய பேராசிரியை ஒருவரே தானும் ஒரு பெண் என்றும் பாராமல் பாலியல் புரோக்கர் போல மாணவிகளிடம் நடந்து கொண்டது விஸ்வரூபம் எடுத்தது.
நிர்மலா தேவிக்கு எதிராக தேவாங்கர் கல்லூரி முன்பு திரண்டு மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் குதித்தனர். அவரை சஸ்பெண்டு செய்தால் மட்டும் போதாது. கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றது.
இதனை தொடர்ந்து தேவாங்கர் கல்லூரி சார்பிலும், மதுரை காமராஜர் பல்கலை கழகம் சார்பிலும் தனித்தனியாக விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. பல்கலை கழக துணைவேந்தரான செல்லதுரை கூறும் போது, நிர்மலா தேவி மீது போலீசில் புகார் அளித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன்படி உடனடியாக அருப்புக்கோட்டை டி.எஸ்.பி. தனபாலிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நிர்மலா தேவியை கைது செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் முடுக்கிவிட்டனர். நேற்று அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியில் உள்ள அவரது வீட்டில் வைத்து நிர்மலாதேவியை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதற்காக நிர்மலாதேவியின் வீட்டுக்கு நேற்று பிற்பகல் 2 மணி அளவில் சென்றனர். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கூடுதல் சூப்பிரண்டு மதி, டி.எஸ்.பி. தனபால், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனப்படையினர் நீண்ட நேரமாக கதவை தட்டிக் கொண்டே இருந்தனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
நிர்மலாதேவியிடம் செல்போனில் பேசிய போலீசார் கதவை திறக்குமாறு கூறினர். ஆனால் வீட்டுக்கு வெளியில் பொது மக்கள் அதிகம் பேர் திரண்டிருந்ததாலும், பத்திரிகையாளர்கள் குவிந்திருந்ததாலும் வெளியில் வர நிர்மலாதேவி மறுத்தார். பின்னர் ஒருவழியாக அவரிடம் பேசி கதவை திறக்க வைத்தனர். கிட்டத்தட்ட 5 மணி நேர போராட்டத்துக்கு பின்னரே நிர்மலாதேவியை போலீசாரால் கைது செய்ய முடிந்தது.
பின்னர் அருப்புக்கோட்டை மகளிர் போலீஸ் நிலையத்துக்கு நிர்மலாதேவி பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட்டது. நேற்று இரவு விடிய விடிய விசாரணை நடைபெற்றது. இன்று 2-வது நாளாகவும் விசாரணை நீடித்தது.
மாணவிகளை பாலியலுக்கு அழைக்க சொன்னதாக நீங்கள் குறிப்பிடும் பல்கலைகழக உயர் அதிகாரிகள் யார்-யார்? என்பது பற்றி நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் இது தொடர்பாக அவர் வாய் திறக்கவில்லை. மவுனத்தையே பதிலாக தந்தார்.
4 மாணவிகளிடம் பேசியது போல இதற்கு முன்னரும் மற்ற மாணவிகளிடம் பேசி இருக்கிறீர்களா? என்பது பற்றியும் நிர்மலாதேவியிடம் கேட்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் சரியாக பதில் அளிக்கவில்லை.
அதே நேரத்தில் மாணவிகளிடம் பேசியது நான்தான். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகம் இந்த விஷயத்தில் என் மீது பழி போட்டு விட்டு தப்பிக்க நினைக்கிறது என்று நிர்மலாதேவி கூறியுள்ளார். நிர்மலாதேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இன்று மாலை அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
அருப்புக்கோட்டை மாஜிஸ்திரேட்டு விடுமுறையில் இருப்பதால் விருதுநகர் கோர்ட்டில் பேராசிரியை நிர்மலாதேவி ஆஜர்படுத்தப்படுவார் என்று தெரிகிறது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
நிர்மலாதேவி மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
1. 370 ஐ.பி.சி. – பாலியல் குற்றத்துக்கு தூண்டுதல்.
2. 511 ஐ.பி.சி. – குற்றச் செயலுக்கு முயற்சி செய்தல்.
3 தகவல் தொழில்நுட்ப சட்டபிரிவு 67 ஆகிய 3 சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பிரிவுகளின் படி அவர் உடனடியாக ஜாமினில் வெளியே வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.