‘சிரியாவில் நம் மீது அமெரிக்கா தாக்குதல் நிகழ்த்தினால், உடனடியாக திருப்பித் தாக்காமல் விட மாட்டோம்’usa russia
ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் கடந்த மார்ச் மாதம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எடுத்த சபதம் இது.
டூமா நகரில் சிரியா அரசு நடத்தியதாகக் கூறப்படும் விஷ வாயுத் தாக்குலுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் போர் முழக்கம் செய்தபோதும், இதே பாணியில் ரஷியா கடுமையாக எச்சரித்தது. ரஷிய ராணுவ தலைமைத் தளபதி வேலெரி ஜெராசிமோவ் ஒரு படி மேலே போய், ‘சிரியாவில் ரஷியா நிலைகொண்டுள்ள அரசுக் கட்டுப்பாட்டுப் பகுதியில் அமெரிக்கா ஏவுகணை வீசும் பட்சத்தில், அந்த ஏவுகணைகளை இடை மறித்து அழிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றை ஏவிய விமானங்கள், போர்க் கப்பல்களையும் தாக்கி அழிப்போம்’ என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தார்.
புத்தம் புதிய, அதி நவீன ஏவுகணைகளை எதிர்கொள்ளத் தயாராகும்படி ரஷியாவுக்கு டிரம்ப் சவால் விடுத்தபோது, கடுமையான பின்விளைகளைச் சந்திக்கத் தயாராகுங்கள் ரஷியாவும் வார்த்தைகளை சொடுக்கியது.
அத்துடன் விட்டுவிடாமல், அமெரிக்க – ரஷிய அணு ஆயுதப் போருக்கு ரஷியா தனது மக்களை தயார்படுத்தியது.
இதன் மூலம், ‘நாங்கள் எதற்கும் தயார்’ என்ற சங்கதியை அமெரிக்காவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷியா இறுமாப்புடன் சொன்னது.
இப்படி ஒரு புறம் போர்க்களம் சூடாகிக் கொண்டே போக, மறுபுறம் அமெரிக்கா சொன்னபடி தாக்குமா, அதற்கு விளாதிமீர் புதினின் பதிலடி எப்படி இருக்கும், மூன்றாம் உலகப் போர் மூளுமா என்றெல்லாம் விவாதக் களங்களும் கண்டபடி சூடுபிடிக்க ஆரம்பித்தன.
இந்த நிலையில், விஷ வாயுத் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வார காலமாக ‘டுவிட்டரில்’ மட்டுமே அம்பு விட்டுக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப், ஒரு வழியாக கடந்த சனிக்கிழமை சிரியாவில் நிஜமாகவே ஏவுகணை வீசினார்.
அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளும் தங்கள் பங்குக்கு சில ஏவுகணைகளை பறக்க விட்டன.
விஷ வாயு தாக்குதல் நடத்தி, தங்கள் சொந்த மக்களையே கொன்று குவிக்கும் சர்வாதிகாரி அல்-அஸாதின் ரசாயன ஆயுத பலத்துக்கு எதிரான மிகத் துல்லிய தாக்குதலை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளோம்’ என்று டொனால்ட் டிரம்ப் அமெரிக்க மக்களிடம் பெருமைப்பட்டுக் கொண்டார்.
இந்த பரபரப்பான சூழலில், அணு ஆயுதங்களை மலையாகக் குவித்திருக்கும் அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் சிரியாவை மையமாகக் கொண்டு நேரடிப் போர் மூளும் என்று பலர் அச்சம் தெரிவித்தனர்.
ஆனால், இத்தகைய பயம் தேவையே இல்லை என்கிறார்கள் பாதுகாப்பு நிபுணர்கள். சொன்னபடியே சிரியாவில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியிருந்தாலும், எதிர்பார்த்த மாதிரி ரஷியத் தரப்பிலிருந்து எதிர்த் தாக்குதல் எதுவும் நடைபெறாததை அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
சிரியாவில் தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு குண்டுகள் பாயும், போர் விமானங்கள், கப்பல்கள் அழிக்கப்படும் என்றெல்லாம் முழக்கமிட்ட ரஷியா, அமெரிக்கக் கூட்டுப் படை தாக்குதலுக்குப் பிறகு, ‘இறையாண்மை கொண்ட ஒரு நாட்டில், அத்து மீறிய தாக்குதல்’ என்ற கண்டனைக் கணைகளை வீசியதோடு நிறுத்திக் கொண்டது.
இதற்குக் காரணம், சிரியாவின் போர்க் களத்தில் எதிரெதிரே நின்றாலும், தங்களுக்கும் நேரடி மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அமெரிக்காவும், ரஷியாவும் மிகக் கவனமாக இருப்பதுதான் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
உண்மையில், ஏவுகணைகளை வீசிவிட்டு டிரம்ப் வீர வசனம் பேசினாலும், அந்தத் தாக்குதல் எதற்கும் உதவாத கண்துடைப்புதான் என்கிறார்கள் அவர்கள்.
ரஷியர்களுக்கோ, ரஷிய ராணுவ தளவாடங்களுக்கோ துளியும் பங்கம் நேராமல், ஊருக்கு ஒதுக்குப் புறமாக மூன்றே மூன்று ரசாயன ஆயுத மையங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அமெரிக்கக் கூட்டுப் படை தாக்குதல் நடத்தியிருக்கிறது.
இது, சிரியா அரசின் விஷ வாயு தாக்குதலுக்கு பதிலடியாக நாங்களும் ஏதோ செய்தோம் என்ற ஒரு திருப்தியை ஏற்படுத்துவதற்காகத்தானே தவிர, அந்தத் தாக்குதலால் சிரியா அரசின் ரசாயன ஆயுத பலத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை ஏவுகணை வீசிய கூட்டுப் படைக்கே இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இன்னும், சொல்லப் போனால், எந்த நேரத்தில், எந்த இடத்தில் தாக்குதல் நடக்கப்போகிறது என்பதை ரஷியாவுக்கும், அதன் மூலம் சிரியாவுக்கும் ஏற்கெனவே தெரியப்படுத்திவிட்டுதான் இந்த ஏவுகணை வீச்சே நடத்தப்பட்டிருக்கும் என்கிறார்கள் ராணுவ விவகாரங்களை நன்கு அறிந்தவர்கள்.
இதில் நகைப்பை ஏற்படுத்தும் ஒரு விஷயம் என்னவென்றால், கடந்த 2015-ஆம் ஆண்டில் சிரியா உள்நாட்டுப் போரில் ரஷியாவும் இறங்கிய பிறகு, ஏற்கெனவே அங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கூட்டுப் படையினருக்கும், ரஷியப் படையினருக்கும் தவறான புரிதல்களால் மோதல் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, தங்களது நடவடிக்கைகள் குறித்த தகவல்களை முன்கூட்டியே பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கான நியதியை இரு தரப்பினரும் அப்போதே வகுத்துக் கொண்டுள்ளதுதான்!
அந்த நியதியின்படி, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் குறித்து ரஷிய அதிகாரிகளிடம் பிரான்ஸ் ராணுவ அதிகாரிகள் முன்கூட்டியே தெரிவித்துவிட்டதாக ரஷியாவின் ‘கொம்மர்சான்ட்’ நாளிதழ் கூறுகிறது.
தற்போது அமெரிக்காவுக்கு எதிராக ரஷியா எந்த பதில் தாக்குதல் நடவடிக்கையும் எடுக்காததற்குக் காரணம், உண்மையிலேயே ரஷியாவின் சீற்றத்தைத் தூண்டும் வகையில் அமெரிக்கா எந்த நடவடிக்கையும் எடுக்காததுதான் என்கிறார்கள் நிபுணர்கள்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் இத்லிப் மாகாண விமான தளத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கும், தற்போது நடத்திய தாக்குதலுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று கூறும் அவர்கள், அண்மையில் சிரியாவிலுள்ள ஈரான் நிலைகள் மீது இஸ்ரேல் நிகழ்த்திய தாக்குதலைப் போன்று ரஷிய நிலைகள் குறிவைக்கப்பட்டிருந்தால் நிலைமை வேறு மாதிரி ஆகியிருக்கும் என்கிறார்கள்.
நிபுணர்கள் கூறும் தகவல்களை வைத்துப் பார்க்கும்போது, சிரியாவிலுள்ள ரஷிய நிலைகள் மீது அமெரிக்காவும், அமெரிக்காவின் நிலைகள் மீது ரஷியாவும் கை வைக்காதவரை, இரு நாடுகளுக்கும் இடையே நேருக்கு நேர் மோதல் ஏற்படாது; இப்போதைய சூழலில் அதற்கான வாய்ப்பே இல்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
– நாகா