அ.தி.மு.க எம்.பி யின் கார் மோதியதில் தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் பலி!

இளைஞர் அருண்குமார்

திருப்பூர் எம்.பி சத்யபாமாவை கோவை விமானநிலையத்தில் இருந்து அழைத்து வரச் சென்ற ஸ்கார்பியோ கார் மோதியதில் தி.மு.க வைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் பாராளுமன்ற தொகுதி அ.தி.மு.க எம்.பி சத்யபாமா. இவரது வீடு ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அமைந்திருக்கிறது. எம்.பியான இவர் டெல்லி மற்றும் பல்வேறு வெளிமாநிலங்களுக்குச் செல்ல கோவை விமானநிலையத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். இந்நிலையில், வெளியூர் சென்றுவிட்டு நேற்று கோவை விமான நிலையம் வந்து இறங்கிய சத்யபாமாவை, அவரது சொந்த ஊரான கோபிச்செட்டிபாளையம் பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக செந்தில்குமார் என்பவர் ஸ்கார்பியோ காரில் கோபியில் இருந்து கோவை நோக்கிச் சென்றிருக்கிறார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்துள்ள செட்டிக்குட்டை பிரிவு என்ற பகுதியை கார் கடந்துகொண்டு இருக்கும்போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து அவ்வழியே சென்ற இரு சக்கர வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணித்த அருண்குமார் என்பவர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் உயிரிழந்த நபர் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த தி.மு.க இளைஞர் அணி உறுப்பினர் என்பதும்  தெரியவந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், அருண்குமாரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அவினாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து தொடர்பாக அருண்குமாரின் சகோதரர் பெருமாள் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.