மனநலம் பாதித்த மகனை பராமரிக்க முடியாமல், மகனுடன் சேர்ந்து தாயும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உடுமலையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
உடுமலை சீனிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு செவிலியர் லூயிஸ் மேரி. இவரது கணவர் ராஜன் 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட, இவர்களது குழந்தைகளான மனோஜ்குமார் மற்றும் மீனா ரோஸி ஆகிய இருவரும் தாயின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தனர். மகன் மனோஜ்குமார் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரை வீட்டில் வைத்துப் பராமரித்து வந்தனர். மகள் மீனா ரோஸி அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்றைய தினம் மீனா ரோஸி வழக்கம் போல் வேலைக்குச் சென்றுவிட, அச்சமயம் வீட்டில் இருந்த தாய் லூயிஸ் மேரி, அவர்களது வீட்டின் முன்பக்க கதவைப் பூட்டிவிட்டு பின்பக்கமாக உள்ளே சென்று, தன்னுடைய மகன் மனோஜ்குமாருடன் சேர்ந்து விஷம் அருந்தி உள்ளார்.
பின்னர் இரவு வழக்கம்போல வீடு திரும்பிய மீனாரோஸி, வீட்டின் கதவு பூட்டியிருப்பதைப் பார்த்து சந்தேகம் அடைந்திருக்கிறார். பின்னர் உடனடியாக வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்தபோது, அங்குக் கதவு திறந்தவாறு இருந்திருக்கிறது. மேலும் வீட்டுக்குள் அவரது தாயும், சகோதரனும் சடலமாக கிடந்திருக்கிறார்கள். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடுமலை காவல்நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். அதன்பிறகு சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “மனநலம் பாதிக்கப்பட்ட மகனை லூயிஸ் மேரியால் தொடர்ந்து பராமரிக்க முடியாமல்போனதால், விரக்தியடைந்து இப்படியொரு முடிவை எடுத்துவிட்டதாகத் தெரிவித்தனர்.