பெண்கள் எதிர்நோக்கும் சவால்!! எவருமேயில்லையா எதிர்த்து கேட்க….?

கடந்த 2009 ஆம் விடுதலை புலிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கில் தினம் தினம் மக்கள் பெரும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றமையினை கண்ணூடாக பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.அவ்வாறே படையினர் செயற்பாடுகள், கற்பழிப்புக்கள், பாலியல் வன்கொடுமைகள், வாள்வெட்டு, போதைப்பொருள் பாவனை போன்ற பல்வேறு சம்பவங்கள் நடைபெறுவதை தினம் தினம் வரும் செய்திகளில் இருந்து காணக்கூடியதாக இருக்கின்றது.தற்போது வாள்வெட்டுக்கள் வடக்கில் குறைந்து இருந்தாலும் கூட திருட்டு கும்பல் தமது கைவரிசையை காட்ட முன்வந்துள்ளனர்.

தென் இந்தியாவில் வீதியில் இறங்கி சங்கிலியை பறித்தும், அவர்கள் முரண்படும் போது அவர்களை கொலை செய்வது போன்ற அதிர்ச்சி சம்பவங்களும் கடந்த சில மாதங்களாக அரங்கேறி வந்தது.இதே போன்ற கொள்ளைச்சம்பவங்கள் தற்போது வடக்கிலும் பெண்களை குறிவைத்து ஆரம்பமாகியுள்ளது.குறிப்பாக இவர்கள் வீட்டில் தனிமையில் இருக்கும் பெண்களை குறிவைத்து இந்த கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் உள்ள கிராமம் ஒன்றிக்கு சென்ற 2 பேர் அடங்கிய கும்பல் அங்கு வீட்டில் இருக்கும் ஆட்களை வெளியில் அழைத்து தண்ணீர் கேட்பதும் பின்னர், அவர்கள் தனியாக தான் இருக்கின்றார்கள் என்றால் அவர்கள் அணிந்திருக்கும் தங்க சங்கிலியை அறுத்து கொண்டும் சென்றுள்ளனர்.

இவ்வாறு அந்த கிராமத்தில் மட்டும் அன்றைய தினம் 10 சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. சம்பவத்தில் தொடர்புடைய குழுக்கள் மோட்டார் சைக்கிளில் வருவதுடன் அதில் வாகன இலக்க தகட்டினை நீக்கிவிட்டு ஊருக்குள் இந்த அசம்பாவித செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பில் பொலிஸாரிடம் வினவிய போது, சிலர் கடந்த சில தினத்துக்கு விடுதலை செய்யப்பட்டதாகவும், அவர்களே இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ளார்.அத்துடன், இவ்வாறு வாகன இலக்க தகடு இன்றி பிரயாணம் செய்பவர்களை கண்டால் உடனே தமக்கோ அல்லது பொலிஸாரின் 119 என்ற அவசர இலக்கத்திற்கோ முறைப்பாட்டினை வழங்குமாறு தெரிவித்துள்ளனர்.

மேலும், இவ்வாறான சம்பங்களை தவிர்க்கும் முகமாக மக்கள் (பெண்கள்) மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.