நீட் தேர்வு விலக்கு மாநாடு!

நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு – புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழர் உரிமைக்கான மாணவர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்தும் நீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாடு இன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

கோப்புப்படம்

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு நீட் (National entrance cum eligibility test)) தேர்வு கட்டாயம் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்தது. கிராமப் புற மாணவர்கள் மற்றும் தமிழ் வழி மாணவர்கள் இதனால், பாதிக்கப்படுவார்கள் என்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். நீட் தேர்வால் மருத்துவக் கல்லூரியில் சேர முடியாமல் போன அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

இந்த நிலையில், நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு வேண்டும் என்று வலியுறுத்தி உலகத் தமிழர் அமைப்பு முன்னெடுக்கும் மாநாட்டை தமிழ்நாடு – புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் தமிழர் உரிமைக்கான மாணவர்கள் – இளைஞர்கள் கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றனர். இந்த மாநாடு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கி – இரவு 10 மணி வரை சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ், திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், டி.டி.வி.தினகரன், பழ.நெடுமாறன், கி.வீரமணி, சீமான் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளனர்.