பூசணி விதைகளின் மருத்துவ மகிமை!

பூசணிக்காய் என்றவுடன் பலருக்கும் நினைவுக்கு வருவது திருஷ்டிக்காக, அது தெருவில் உடைந்துகிடக்கும் காட்சிதான். அதேபோல பூசணிக்காயை பலர் உணவில் பயன்படுத்துவதும் குறைவு. பூசணிக்காய் மகிமை நிறைந்தது. அதிலும் பூசணி விதைகளுக்கு எக்கச்சக்க மருத்துவக் குணங்கள் உள்ளன. இது தெரியாமல் பலர், சமைக்கும்போது பூசணிக்காயை நறுக்கியவுடனேயே அதனுள்ளே இருக்கும் மொத்தப் பூசணி விதைகளையும் அப்படியே வழித்தெடுத்து, வெளியே கொட்டிவிடுவார்கள்.

பூசணி விதைகள்

வட அமெரிக்கா, தென் அமெரிக்கா , மத்திய அமெரிக்கா ஆகிய நாடுகளில் அதிகமாகப் பயிரிடப்படும் காய்கறிகளில் ஒன்று பூசணி. உலகமெங்கும் சுமார் 40-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன . சிவப்பு, மஞ்சள், பச்சை நிறங்களில் இருக்கும் பூசணிக்காய், அண்டார்டிகாவைத் தவிர உலகின் எல்லா கண்டங்களிலும் பயிரிடப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை, மருந்துத் தயாரிப்புகளில்தான் பூசணி விதை அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்கா, ஐரோப்பா, ஆப்பிரிக்க நாடுகளில் உணவிலும் இவற்றை அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். நாமோ அந்த அளவுக்கு இன்னும் பூசணி சித்த மருத்துவர் ரமேஷ் விதைகளை உணவில் சேர்த்துக்கொள்ளப் பழகவில்லை.

`பூசணியின் காய் மட்டுமல்ல, அதன் விதைகளும் தூக்கி எறியக்கூடிய பொருளல்ல என்பதை நினைவில் வைத்திருந்தால் போதும். இவற்றின் மருத்துவக் குணங்கள் அபாரமானவை’ என்கிறார் சித்த மருத்துவர் ரமேஷ். பூசணி விதைகளில் உள்ள சத்துகளையும், நம் ஆரோக்கியத்துக்கு அள்ளி வழங்கும் நலன்களையும் பட்டியலிடுகிறார்…

சத்துகள்

இதில் நார்ச்சத்து, புரதம் , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் இ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன. 100 கிராம் பூசணி விதைகளைச் சாப்பிடுவதன் மூலம் 600 கலோரிகளைப் பெறலாம்.

விதைகள்

இதயம் காக்கும்

இவற்றில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம் கிடைத்துவிடும். மக்னீசியம் ரத்த அழுத்தம் மற்றும் `சடர்ன் கார்டியாக் அரெஸ்ட்’ (Sudden Cardiac Arrest) எனப்படும் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஆகியவற்றைத் தடுக்க உதவும்.

நோய் எதிர்ப்புச் சக்தி

இவற்றில் உள்ள துத்தநாகச் சத்துகள், நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். ஒரு அவுன்ஸ் பூசணி விதையில் 2 மிலி என்ற அளவில் துத்தநாகம் உள்ளது. இது செல்களின் வளர்ச்சிக்கு உதவும். துத்தநாகச் தாதுசத்து குறைபாட்டால் சளி மற்றும் காய்ச்சல், நாள்பட்ட சோர்வு, மனஅழுத்தம், முகப்பரு, குறைந்த எடையுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, இந்தக் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டோருக்கு மிகச் சிறந்த உணவு இந்த விதைகள்.

சர்க்கரைநோய் தடுக்கும்

தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.

கல்லீரல் நலம் காக்கும்

ஆரோக்கியமான கொழுப்பு விதைகளில் நிறைந்துள்ளது. இதில் உள்ள நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்டுகள் கல்லீரல் இயக்கத்தைச் சீராக்கும். இதனுடன் ஆளி விதைகளைச் சேர்த்து உண்டால் பலன் மேலும் அதிகரிக்கும்.

ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்!

இந்த விதைகளில் உள்ள டிரிப்தோபான் (Tryptophan) என்னும் அமினோ அமிலங்கள் தூக்கத்தைத் தூண்டும் `செரொட்டோனின்’ (serotonin) என்ற ஹார்மோன் சுரக்க உதவும். இதனால் தூங்குவதற்குச் சிறிது நேரத்துக்கு முன்னர் இந்த விதைகளைச் சாப்பிட்டால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும்.

பூசணி

உள்காயங்களைச் சரியாக்கும்

இந்த விதைகளில் உள்ள ஆன்டி இன்ஃப்ளாமேட்டரி பொருள்கள் உள்காயங்களை ஆற்றும் தன்மைகொண்டவை.

உடல் வலிமை தரும்

இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.

மாதவிடாய்க் கோளாறு நீக்கும்

பெண்கள், இந்த விதைகளை நெய்யில் வறுத்து, அதை தினமும் சாப்பிட்டுவந்தால், மாதவிடாய் வலி மற்றும் வெள்ளைப்படுதல் பிரச்னைகள் வராமல் தடுக்கும்.

உஷ்ணம் குறைக்கும்!

ஆண்களின் பாலியல் ஹார்மோன்களைத் தூண்டி, ஆண்மைத் தன்மையை அதிகரிக்கச் செய்யும். இந்த விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து குடித்தால், உடல் உஷ்ணம் குறையும். விந்தணுக்களின் திறன் அதிகரிக்கும்.

கஷாயம் 
இந்த விதைகளில் 5 அல்லது 10 கிராமை வறுத்து, நாட்டுச்சக்கரையுடன் சேர்த்து கஷாயமாக்கி இரவில் குடித்துவிட்டு, மறுநாள் காலை அரை டீஸ்பூன் விளக்கெண்ணெய் குடிக்கவும், பிறகு வெந்நீர் குடித்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள், தட்டைப்புழுக்கள், நாடப்புழு நீங்கும். இவற்றில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்டுகள், நமது உடம்பில் உள்ள ரசாயனத் தாக்கத்தைக் குறைக்கும்; சிறுநீரகப் பிரச்னைகளை நீக்கும்; நாளமில்லாச் சுரப்பிகளைச் சீராகச் செயல்பட வைக்கும்.