தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பி.டி.பி)யிடம் ஆதரவு கோரியமைக்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஈ.பி.டி.பியிடம் ஆதரவு கோரி தொலைபேசி ஊடாக பேசியமைக்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. தேவை என்றால் அவற்றை வெளியிட நாம் தயார்.
யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் ஈ.பி.டி.பிக்கு விட்டுத் தருவதாகவும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானமும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் எமக்கு வாக்குறுதிகளை வழங்கினார்கள். அத்துடன் பகைமையை மறப்போம் என்றும் கூறினார்கள்.
வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன் என பலர் எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸிடம் தொலைபேசியில் பேசியிருந்தனர்.
ஒவ்வொருவரும் நாட்கணக்கில் மாறி மாறி பேசிக்கொண்டே இருந்தனர். மேலும் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள், எமது உறுப்பினரான முடியப்பு ரெமீடியஸ்ஸின் வீட்டிற்கு வரவா? என கேட்டுள்ளார். அதற்கு ரெமீடியஸ் மறுத்துவிட்டார்.
எங்களிடமும் பலரும் தொடர்ந்தும் உதவி கேட்டு தொலைபேசி வழியே அழைத்தனர். செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாடாளுமன்றில் நேரடியாக இவர்கள் உதவி கேட்டனர் என ஈ.பி.டி.பி கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.