திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில் மிகவும் புகழ் பெற்றது. அதில் ஏற்கெனவே மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்துகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் தற்போது கி.பி 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரந்தக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர் மிகவும் பழைமையானது. திருச்சி சங்ககால சோழரது தலைநகரம். சமணம், சைவம் ஆகிய மதங்கள் செழித்து வளர்ந்த இடம் திருச்சி. திருச்சி மலைக்கோட்டையில் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மலைக்கோட்டையில் தாயுமானவர் கோயிலுக்குப் பின்புறமாகக் காணப்படும் மலைச்சரிவில் தியான நிலையில் முகம் சிதைந்த சிவனடியார் ஒருவரது புடைப்புச் சிற்பம் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. சிவனடியாருக்கு இரண்டு பக்கத்திலும் தேவியர்கள் இருவர் வணங்கிய நிலையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். பார்ப்பதற்குப் புத்தரது சிலையைப் போன்று தோன்றும் அந்தச் சிற்பத்துக்கு மேலே காணப்படும் இரண்டு வரிகள் அவர் சிவனடியார் என்பதைக் குறிப்பிடுகின்றன.
மேலும் அதற்கு அருகில் கி.பி 5 – ம் அல்லது 6 – ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கிரந்த எழுத்தும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே மலைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் மகேந்திரப் பல்லவனின் பல்லவ கிரந்த எழுத்திற்கு முற்றிலும் மாறுபட்ட தமிழ் கிரந்த எழுத்து (தமிழி) அது. இந்தக் கல்வெட்டில் நன்அரிய, குணநன்பன், அகாமோ, தீயன், ஸ்ரீமணி அரையா ஆகிய பெயர்களை அடையாளம் காண முடிகிறது. மற்ற செய்திகள் படிக்க இயலாதபடி எழுத்துகள் சிதைந்திருக்கின்றன.
இந்தக் கிரந்தக் கல்வெட்டினைக் கண்டுபிடித்த பார்த்தி மற்றும் முருகனிடம் இதன் முக்கியத்துவம் குறித்து கேட்டபோது, “சங்க காலத்தில் பயன்படுத்திய தமிழ் எழுத்து முறைக்கு தமிழி (தமிழ் பிராமி) என்று பெயர். இதற்கு அடுத்த நிலை தமிழ் கிரந்தம். தமிழ் கிரந்த எழுத்து பல்லவ கிரந்த எழுத்தாக மாறுவதற்கு முந்தைய நிலையில் காணப்படுகிறது இந்தக் கல்வெட்டு. தமிழி பல்லவ கிரந்தமாக மாறிய நிலையைக் கண்டறிய இந்தக் கல்வெட்டு எழுத்துகள் நிச்சயம் பயன்படும். வினோத் என்பவர் அளித்த தகவலின் அடிப்படையில் கல்வெட்டு புதிது என்பதை உறுதி செய்தோம். பிறகு தொல்லியல் கழகத் தலைவர் ராஜவேல் குழுவினருடன் வந்து இதைப் படித்து படியெடுத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்கள்.
இதே மலைக்கோட்டையில் 11 ம் நூற்றாண்டு கால சோழக் கல்வெட்டு படியெடுக்கப்படாமல் சிதைந்து போய் இருக்கிறது. மேலும், திருச்சிராப்பள்ளி எனப் பெயர் வரக் காரணமான கி.பி 2 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த ‘சிராப்பள்ளி’ எனும் சமணக் கல்வெட்டும் சிதைந்து அழிந்துவிட்டது. அதனைப் போன்று இல்லாமல் இந்தத் தமிழ் கிரந்த எழுத்தின் முக்கியத்துவம் கருதி இதனை அரசு காக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.