இராணுவ கட்டளைத் தளபதியிடம் ஏ கே 47 துப்பாக்கி கேட்ட சிறுவன்!

முள்ளிவாய்க்கால் முன்பள்ளி ஒன்றில் கல்வி கற்கும் 5 வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி வேண்டும் என்ற கோரிக்கையை இராணுவத்தினரிடம் முன்வைத்த நிலையில் குறித்த சிறுவனுக்கு விளையாட்டுப் பொருளாக முச்சக்கர வண்டி பொம்மை ஒன்றை 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி இன்று வழங்கியுள்ளார்.

முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு விழா இன்று பிற்பகல் முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் நடைபெற்றுள்ளது.

இதில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட முள்ளிவாய்க்கால் மேற்கு 681 ஆவது படைப்பிரிவு இராணுவ தளபதியே இவ்வாறு பரிசளித்துள்ளார்.

அண்மையில் குறித்த முன்பள்ளி மாணவாகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்க சென்ற குறித்த இராணுவத் தளபதி சிறுவர்களிடம் விளையாட்டு பொருட்கள் என்ன வேண்டும் என்று கேட்டுள்ளார்.

இதற்கு 5வயது சிறுவன் ஒருவர் ஏ கே 47 துப்பாக்கி ஒன்று எனக்கு தேவை என்று பதிலளித்துள்ளார். இராணுவத்தினர் எதிர்பாராதவிதமாக குறித்த சிறுவனின் பதில் அமைந்திருந்ததினால் அந்த சிறுவனை அழைத்த இராணுவத்தளபதி மாற்றுப்பொருள் ஏதேனும் ஒன்றை கேட்கும்படி அன்பாக பணித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த சிறுவன் கெலிகொப்டர் ஒன்று தேவை என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இன்று முள்ளிவாய்க்கால் கிழக்கு சந்திரன் முன்பள்ளி விளையாட்டு விழாவில் கௌரவ விருந்தினராக கலந்து கொண்ட 681 வது படைப்பிரிவு இராணுவ கட்டளை தளபதி குறித்த சிறுவனை அழைத்து முச்சக்கர வண்டி விளையாட்டுப் பொருளினை சிறப்பு பரிசாக வழங்கியுள்ளார்.

அனைத்து முன்பள்ளி மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான (விளையாட்டு) பொலிஸ் வாகனங்களை பரிசாக வழங்கியுள்ளதாக சந்திரன் முன்பள்ளி அசிரியர் குறிப்பிட்டுள்ளார்.