ஐ.பி.எல் தொடரின் 16வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதியது.
டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. அதிரடியாக விளையாடிய கெயில், 11 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என 63 பந்துகளில் 104 ரன்கள் குவித்து இந்த சீசனின் முதல் சதத்தை பதிவு செய்தார்.
20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கைக் கொண்டு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் களமிறங்கியது.
தவான் எதிர்கொண்ட முதல் பந்து அவரது கையை பதம்பார்த்தது. அதனால், ரிட்டையர்ட் ஹர்ட் என தவான் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த வில்லியம்சன் பொறுப்புடன் விளையாடிக்கொண்டிருக்க, எதிர்முனையில் சாஹா, யூசுஃப் பதான் என அடுத்தடுத்த நடையைக்கட்ட ஆரம்பித்தனர்.
பிறகு, வில்லியம்சன்னுடம் – மணீஷ் பாண்டே ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்து ரன் சேர்த்தது. 54 ரன்கள் எடுத்த நிலையில் வில்லியம்சன் ஃபிஞ்சிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இறுதியாக, மணீஷ் பாண்டே 57 ரன்களுடனும் சகிப் அல் ஹசான் 24 ரன்களுடனும் களத்தில் நின்றனர். 20 ஓவரின் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கிறிஸ் கெயில் தேர்வு செய்யப்பட்டார்.