கிட்டத்தட்ட நான், என் கணவர், அவரது நண்பர் மற்றும் நண்பரின் மனைவி என நால்வரும் மிகவும் நெருங்கிய வட்டத்தில் பழகி வருபவர்கள்.
சொந்த, பந்தங்களின் வீட்டுக்கு சென்று வருவது கூட தவறலாம். ஆனால், எந்த ஒரு நல்ல நாளிலும், வார இறுதியிலும், நாங்கள் நால்வர் சந்தித்துக் கொள்வது தடைப்பட்டு போகாது.
மிகவும் நெருக்கமான உறவு பிணைப்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என் கணவரும், அவரது நண்பரும். இருவரும் சிறு வயதில் இருந்து தோழர்கள். இவர்களது நட்பின் ஆழத்தின் காரணமாகவே நானும், கணவர் நண்பரின் மனைவியும் தோழமை வட்டத்தில் இணைந்தோம்.
ஆனால், சில வாரங்களுக்கு முன் நாங்கள் வெளி சென்று வீடு திரும்புகையில், கணவர் உடல்நலம் சோர்வாக இருப்பதால் சீக்கிரம் கிளம்பி விட்டார்.
அவரது நண்பர் தான் என்னை வீட்டில் டிராப் செய்ய கூட்டி வந்தார். அந்த நேரத்தில் தான், கணவரின் நண்பர் என் மீது ஈர்ப்புக் கொண்டிருப்பதாக பேச்சுவாக்கில் கூறினார்.
இதை தொடர்ந்த எங்கள் உரையாடலின் நடுவே அவர் எதிர்பாராத தருணத்தில் என்னை முத்தமிட்டார். நான் அதை தடுக்கவில்லை. அடுத்த நாளே, கணவரின் நண்பர் எனக்கு கால் செய்து, நேற்று இரவு முத்தமிட்டதை நான் தவறாக கருதவில்லை.
எனக்கு உன்னை பிடித்திருக்கிறது என்று கூறி போனை வைத்துவிட்டான். இந்த நிகழ்வுக்கு பிறகு எனக்கும் அவர் மீது ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால், நான் என் கனவரை மிகவும் நேசிக்கிறேன். இந்த திடீர் ஈர்ப்பை என்ன செய்வது?
முடிவு உங்களுக்கே தெரியும்!
உங்கள் கணவரும், அவர் தோழரும் ஒருவரை ஒருவர் எவ்வளவு நேசிக்கிறார்கள், அவர்கள் நட்பு எவ்வளவு ஆழமானது என்பதை நீங்களே கூறிவிட்டீர்கள். இது இருவர் பற்றிய விஷயமோ, நீங்கள், உங்கள் கணவர், அவரது நண்பர் என மூவர் குறித்த விஷயமோ அல்ல. எதிர்புறத்தில் உங்களை போலவே மற்றுமொரு பெண்ணும் இருக்கிறார்.
ஒருவேளை இதே போன்ற உறவில் உங்கள் கணவரும், அவரது நண்பரின் மனைவியும் இணைந்திருந்தால்… நீங்கள் என்ன செய்வீர்கள்? அப்படி ஒரு செய்தி உங்கள் காதுகளை எட்டினால் உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும்… நீங்கள் எதிர்கொள்ளும் வலி எத்தகையதாக இருக்கும். இதை எல்லாம் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.
சந்தோஷம் என்னவாகும்?
உறவினர் வீடுகளுக்கு செல்வதை கூட மறந்திருப்போம், ஆனால், ஒவ்வொரு வார இறுதியிலும் நாங்கள் நால்வரும் சந்தித்துக் கொள்வதை தவறவிடவே மாட்டோம் என்று கூறுகிறீர்கள்.
ஆக, இப்போதைக்கு உங்கள் நால்வரின் மகிழ்ச்சியும் உங்கள் நான்கு பேரை சுற்றி தான் இருக்கிறது. நீங்கள் இருவரும் செய்யும் தவறு, மற்றருவரின் மகிழ்ச்சியையும் கொல்லும்
குழந்தைகள்?
நீங்கள் கூறுவதை வைத்து பார்க்கும் போது, நிச்சயம் நீங்கள் இருவருமே புதிதாக திருமணமான தம்பதியாக இருக்க வேண்டும். எந்த இடத்திலும், உங்களுக்கு குழந்தைகள் இருப்பது குறித்து நீங்கள் கூறவில்லை.
ஒருவேளை, நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்வதை தள்ளிப் போட்டிருந்தால், முதலில் குழந்தை பெற்றுக் கொள்வதற்கான வேலையை பாருங்கள்.
எல்லா விஷயங்களிலும் அலுப்பு வரும். காதலில், உறவிலும் இந்த அலுப்பு வரும். ஆனால், உங்களுக்கு மிக வேகமாக, சீக்கிரமாக வந்துவிட்டது போல தோன்றுகிறது. ஆனால், கணவர் மீதான உங்கள் காதலும், நேசமும் குறையவில்லை என்பதை நீங்களே ஒப்புக் கொள்கிறீர்கள். இது வெறும் மாயை. இதுப் போன்ற ஆசைகள் பாஸிங் கிளவுட் போல. அதை பின்தொடர்ந்து சென்றால், உங்கள் வாழ்க்கை தான் திசை மாறி போகும்.
கூறிடுங்கள்!
உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் கணவரின் நண்பரும் கூட இத்தகைய செயலால் தான் உங்கள் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார். உங்கள் இருவருக்குமே ஒருமுறை இணைந்துவிட்டால் போதுமென்ற மோகம் மட்டுமே அடுத்தக் கட்டத்தில் தோன்றும். நிச்சயம், ஓரிரு கூடலுக்கு பிறகு, தங்கள் துணை தான் சிறந்தவர் என்ற முடிவுக்கு நீங்கள் வருவீர்கள். ஆனால், அதெல்லாம் நடப்பதற்கு முன்னரே நீங்கள் ஜாக்கிரதையாக இருந்துக் கொள்வது நல்லது.
முத்தம் தானே?
முத்தமிட்டுக் கொண்டதை நீங்கள் தவறாக எண்ணுகிறீர்களா? வெறும் முத்தத்துடன் முடித்துக் கொண்டோமே என்று சந்தோஷப்படுங்கள்.
இல்லையேல், வீண் சண்டை, மனக்கசப்பு உண்டாகி ஒட்டு மொத்த வாழ்க்கையின் மகிழ்ச்சியை இழந்திருப்பீர்கள். அந்த முத்தம் உங்கள் சகோதரனோ, நண்பனோ கொடுத்ததாக நினைத்துக் கொண்டு, முத்த தடத்தையும், அந்த நிகழ்வின் நினைவுகளையும் அழித்துவிடுங்கள்.
முடிந்த வரை, இப்படி ஒரு நிகழ்வு நடந்ததாக நீங்கள் உங்கள் கணவரிடமோ, அவர் (கணவரின் நண்பர்) தன் மனைவியிடமோ கூறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தலைக்கு வந்தது தலை பாகையுடன் சென்று விட்டது என்று நிம்மதி அடையுங்கள். இப்படியான சூழலில் இணைந்து, பிறகு தெரியாமல் செய்துவிட்டோம் என்று வருடக்கணக்கில் வருந்தும் நபர்கள் எத்தனயோ பேர் இருக்கிறார்கள்.
கூடுங்கள்!
முடிந்த வரை இனிமேல் உங்கள் கணவர் மீது அதிக அன்பு செலுத்துங்கள். கூடி மகிழுங்கள். முன்னவே கூறியது போல, ஒரு குழந்தை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுங்கள். உங்கள் உறவுக்கொரு அடையாளம் கிடைத்துவிட்டால். அதன் பிறகு இப்படியான சல்லாப ஆசைகள் மீது மனம் அலைபாயாது.